RCB vs SRH - போட்டிக்கு முன்பே ஸ்கோரை கணித்த பாட் கம்மின்ஸ்..வேற லெவல்! மிஸ் ஆகியிருந்தால் தோல்வி
பெங்களூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய ஆட்டத்தில் டாஸ் போடும் முன்பு ஸ்கோரை பாட் கமின்ஸ் சரியாக கணித்து இருக்கும் சம்பவம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறது. கிரிக்கெட்டில் எப்போதுமே கேப்டனின் அனுபவம் மற்றும் ஆட்டத்தை அணுகுமுறை தான் வெற்றிக்கு காரணமாக இருக்கும்.
எப்படி தோனி எதிரணியையும் ஆடுகளத்தையும் கணித்து, அதற்கு ஏற்றார் போல் திட்டத்தை வகுப்பாரோ, அதே போல் பாட் கம்மின்ஸூம் செய்து வருகிறார். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் பாட் கம்மின்ஸ், தான் சிறந்த கேப்டனாக இருக்கிறார்.

ஐசிசி உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசஸ் தொடர் என மூன்று மிகப்பெரிய தொடரை டாட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியா அணி வென்றிருக்கிறது. கிரிக்கெட் தொடர்பான நுண்ணறிவு இல்லாமல் இத்தகைய சாதனையை படைக்க முடியுமா என்ன? ஆர் சி பி, ஹைதராபாத் அணிகள் மோதும் ஆட்டத்தில் கம்மின்ஸ் டாஸ் வீசும்போது ஆடுகளம் குறித்து சரியாக கணித்தார்.
பொதுவாக ரன் குவிப்புக்கு சாதகமான மைதானத்தில் 200 ரன்கள் அடித்தால் வெற்றி கிடைக்கும் என்று பலரும் நம்புவார்கள். 240 ரன்கள் எல்லாம் இலக்காக வைத்தால் நிச்சயம் அந்த அணி தோற்காது என்ற இலக்கணம் இருக்கிறது. ஆனால் இதை எல்லாம் சுக்குநூறாக உடைப்பது போல் பாட் கம்மின்ஸின் சின்னசாமி ஆடுகளம் குறித்தான கணிப்பு அமைந்திருக்கிறது.
டாஸ் வீசும்போது இந்த ஆடு களத்தில் 240 ரன்கள் எல்லாம் அடித்தால் வெற்றி பெற முடியாது. அதனை ஈசியாக எதிரணி துரத்தி விடுவார்கள் என்று கூறிய பாட் கம்மின்ஸ், அதற்கு ஏற்றார் போல் அணியின் யுக்திகளை மாற்றி அமைத்தார். அபிஷேக் ஷர்மா டிராவிஸ் ஹெட் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு எட்டு புள்ளி ஒரு ஓவரில் எல்லாம் 108 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் ஆட்டமிழந்தவுடன் உடனடியாக கிளாசனை களம் இறக்கினார்.
அவரும் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார். அத்துடன் நிறுத்தாமல் மீண்டும் அப்துல் சமத்தை கடைசி கட்டத்தில் இறக்கி ஆச்சரியம் அளித்தார். இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 287 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இதுவே ஒரு வேறு கேப்டனாக இருந்தால், 240 அடித்தால் போதும் என்று நினைத்திருப்பார்.
ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி அப்படி நினைத்து இருந்தால் இந்நேரம் தோல்வியை தழுவியிருக்கும். ஏனென்றால் ஆர் சி பி அணி 20 ஓவரில் 262 ரன்கள் வரை வந்தது.இதனால் சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கம்மின்ஸ் சரியான முறையில் ஆடுகளத்தைக் கணித்து அதற்கேற்ற போல் திட்டத்தை வகுத்ததால்தான் அந்த அணி வெற்றியை பெற்று இருக்கிறது.


Click it and Unblock the Notifications