சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இக்கட்டான நிலையில் உள்ளது. தான் ஆடிய எட்டு போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்து இருக்கிறது. அதன் காரணமாக புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த இக்கட்டான நிலைக்கு காரணம் துவக்க வீரர்கள் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக துவக்க வீரராக அதிரடி ஆட்டம் ஆடி வந்த டெவான் கான்வே 2024 ஐபிஎல் தொடருக்கு முன் காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில் இருந்தார்.

அதனால் ரச்சின் ரவீந்திரா - ருதுராஜ் கெய்க்வாட் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் ஐந்து போட்டிகளில் சேர்ந்து ஆடிய நிலையில் ரச்சின் ரவீந்திரா இரண்டு போட்டிகளில் மட்டுமே சிறப்பாக ஆடி ரன் குவித்தார். மற்ற போட்டிகளில் அவரால் அதிரடியாக ஆடி ரன் குவிக்க முடியவில்லை. இடையே ருதுராஜ் கெய்க்வாட்டும் சரியாக ரன் எடுக்காத நிலையில் ஐந்து போட்டிகளுக்கு பின் ருதுராஜ் கெய்க்வாட்டை மூன்றாம் வரிசைக்கு மாற்றினார் பயிற்சியாளர் பிளெம்மிங். அதன் பின் ரஹானே - ரச்சின் துவக்கம் அளித்தனர்.
ஏழு போட்டிகளுக்கு பின் சரியாக ரன் குவிக்காத ரச்சின் ரவீந்திராவை அணியில் இருந்து நீக்கினார் பயிற்சியாளர் பிளெம்மிங். அவருக்கு பதில் மீண்டும் ருதுராஜ் கெய்க்வாட், ரஹானேவுடன் இணைந்து துவக்கம் அளித்தார். இப்படி துவக்க வீரர்கள் மாறிக் கொண்டே இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணியின் துவக்க வீரர்கள் தான் 2024 ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்டு இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரமும் வெளியாகி உள்ளது.
சிஎஸ்கே அணியின் துவக்க வீரர்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் 171 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர். இதன் சராசரி 21.37 மட்டுமே. இதன் ரன் ரேட் ஒரு ஓவருக்கு 8.27 ஆக உள்ளது. ஒரே ஒருவர் மட்டுமே 50 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளனர். ஒட்டுமொத்த பத்து அணிகளின் துவக்க வீரர்களில் சிஎஸ்கே அணியின் துவக்க வீரர்களின் செயல்பாடு தான் மோசமாக உள்ளது. சிஎஸ்கே அணியின் தோல்விகளுக்கும் துவக்க வீரர்களே காரணம் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங் மூன்று முறை அணியின் துவக்க ஜோடியை மாற்றியும் பலனளிக்காததால் நொந்து போய் இருக்கிறார்.