IPL 2024: மழை பெய்தால் பிளே ஆஃப் போட்டி கைவிடப்படுமா? ரிசர்வ் நாள் உள்ளதா? ஐபிஎல் விதி என்ன?
அகமதாபாத் : 2024 ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் போட்டிகளின் போது மழை பெய்தால் போட்டி கைவிடப்படுமா? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.
2024 ஐபிஎல் தொடர் முதல் பிளே ஆஃப் சுற்றுக்கான விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது பிசிசிஐ. அதன்படி பிளே ஆஃப் போட்டிகளின் போது மழை பெய்தால் முதலில் கூடுதல் கால அவகாசம் அளிக்கப்படும். இரண்டாவதாக ரிசர்வ் நாளில் போட்டியை நடத்தலாம். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரு பிளே ஆஃப் போட்டி மழையால் தடைபட்டால் நிர்ணயிக்கப்பட்ட போட்டி நேரத்தை விட இரண்டு மணி நேரம் கூடுதலாக அளிக்கப்படும். அந்த நேரத்திற்குள் போட்டியை நடத்தி முடிக்கலாம். லீக் சுற்று போட்டிகளின் போது மழை பெய்யும் பட்சத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே கூடுதலாக கொடுக்கப்படும். ஆனால் பிளே ஆஃப் சுற்றுக்கு இந்த ஆண்டு முதல் இரண்டு மணி நேரம் வரை கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டிக்கும் இந்த விதி பொருந்தும்.
மழையால் தடைபடும் பிளே ஆஃப் போட்டிகளின் போது இரண்டு மணி நேரம் கூடுதல் கால அவகாசத்திலும் போட்டியை முடிக்க முடியவில்லை என்றால், ரிசர்வ் நாளான மறுநாள் போட்டியை நடத்தலாம். ஒவ்வொரு பிளே ஆஃப் போட்டிக்கும் ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி நாள் மற்றும் ரிசர்வ் நாள் என இரண்டு நாட்களிலும் மழையால் போட்டியை நடத்தி முடிக்க முடியவில்லை என்றால் புள்ளிப் பட்டியலில் எந்த அணி முன்னிலை பெற்று இருந்ததோ அதன் அடிப்படையில் அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
அதுபோல பிளே ஆஃப் போட்டி டை-யானால் சூப்பர் ஓவர் நடத்தப்படும். சூப்பர் ஓவரும் டை ஆனால் அல்லது கூடுதல் நேரத்தின் காரணமாக நடத்தி முடிக்க முடியவில்லை என்றால் புள்ளிப் பட்டியலில் எந்த அணி முன்னிலையில் இருந்ததோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இந்த விதிகள் அனைத்தும் இறுதிப் போட்டிக்கும் பொருந்தும். முன்பு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் நாள் இருந்தது. இந்த ஆண்டு முதல் பிளே ஆஃப் போட்டிகளுக்கும் அதை அமல்படுத்தி இருக்கிறது பிசிசிஐ.


Click it and Unblock the Notifications