மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடருக்கான ஏலம் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு அணிகளும் ஏலத்திற்கு பணம் தேவைப்படுவதால் சில பல வீரர்களை விடுவித்து வருகிறது.
அந்த வகையில் பஞ்சாப் அணி ஐந்து வீரர்களை விடுவித்து பிசிசிஐக்கு பட்டியலை அனுப்பி இருக்கிறது. அது யார் என்று இப்போது பார்க்கலாம். பஞ்சாப் அணியில் நட்சத்திர வீரராக இலங்கை அணியின் பனுகா ராஜபக்சா விளங்கினார்.

ஆனால் அவரை பஞ்சாப் அணி விடுவித்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இதேபோன்று மோஹித் ராதே, பட்லேஜ் தந்தா என்ற யாரும் அறியப்படாத வீரர்களை பஞ்சாப் அணி விடுவித்து இருக்கிறது. இதேபோன்று அண்டர் 19 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ராஜ் பவாவை பஞ்சாப் அணி விடுவித்து இருக்கிறது.
இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆல்ரவுண்டராக ராஜ் பவா திகழ்வார் என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியிருந்தார்கள். ஆனால் ராஜ் பவா சரியாக விளையாடவில்லை எனக் கூறி அவரை அணியிலிருந்து விடுவித்து இருக்கிறது. இதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்த அதிரடி வீரர் ஷாருக்கான் பஞ்சாப் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதும் அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதிரடி வீரராகவும் தற்போது சுழற் பந்து வீச கற்றுக் கொண்டுள்ள ஷாருக்கான் எந்த அணிக்கு சென்றாலும் மிகப்பெரிய ஹிட்டராக திகழ்வார். ஆனால் பஞ்சாப் அணி அவரை சரியாக பயன்படுத்தவில்லை. இந்த நிலையில் அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே ஷாருக்கானை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்க திட்டம் போட்டது. தற்போது கையில் 30 கோடி ரூபாய் உள்ள நிலையில் ஷாருக்கான் சிஎஸ்கே அணிக்கு வந்தால் அது ஜாக்பாட் ஆக அமையும்.
மேலும் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கும் பதிலளிக்கும் விதமாக இருக்கும். இதனிடையே சாம் கரணை பஞ்சாப் அணி விடுவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதேபோன்று ஜானி பாரிஸ்டோ , சிக்கந்தர் ராசா, லியோன் லிவிங்ஸ்டோன், ரபாடா, நாதன் எலிஸ் ஆகியோரும் பஞ்சாப் அணியில் தக்க வைத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.