டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி அபாரமாக விளையாடி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரிஷப் பன்ட், தாம் ஏன் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்திருக்கிறார்.
வெறும் பேட்ஸ்மேன் ஆக மட்டுமல்லாமல் கேப்டன் ஆகவும் ரிஷப் பன்ட் சிறப்பாக செயல்பட்டு தற்போது அடுத்தடுத்து வெற்றியை ருசித்து இருக்கிறார். இதன் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி 44 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது அக்சர் பட்டேலுடன், ஜோடி சேர்ந்து பண்ட் அதிரடி காட்டினார். டெல்லி 160 ரன்கள் கூட தாண்டாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிஷப் பண்டில் இந்த பேயாட்டம் டெல்லி அணி 224 ரன்கள் என்று இலக்கு எட்ட உதவியது. குறிப்பாக ரிஷப் பண்ட் 43 பந்துகளை எதிர் கொண்டு 88 ரன்களை குவித்தார்.
இதில் ஐந்து பவுண்டரிகளும், 8 இமாலய சிக்ஸர்களும் அடங்கும். ரிஷப் பண்டின் இந்த ஆட்டத்தின் மூலம் டி20 உலக கோப்பை விக்கெட் கீப்பராக தான் வரவேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ஒரு துரதிர்ஷ்டவச சம்பவம் நடைபெற்றது.
ரிஷப் பண்ட் அடித்த சிக்சர் ஒன்று கேமரா மேன் ஒருவர் மீது தாக்கியது. இதில் அந்த கேமராமேனுக்கு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த கேமராமேன் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆட்டம் முடிந்தவுடன் ரிஷப் பண்டிடம் இந்த விஷயம் குறித்து சொல்லப்பட்டது. இதனால் பதறிப்போன ரிஷப் பண்ட் அந்த கேமராமேனுக்கு ஒன்றும் ஆகவில்லை என தெரிந்தவுடன் நிம்மதியானார்.
எனினும் விபத்தில் சிக்குவதும், அதிலிருந்து மீண்டு வருவதும் எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்து கொண்ட பண்ட் கேமராமேனுக்காக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்களை வேண்டுமென்று தாக்கவில்லை. நீங்கள் மீண்டு வந்து உங்களுடைய பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கேமராமேனின் பெயரைச் சொல்லி ஹிந்தியில் அண்ணா என்று குறிப்பிட்டார். ரிஷப் பண்டின் இந்த செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.