இன்னும் முழு ஃபிட்னஸை எட்டவில்லை போல.. ஐபிஎல் தொடரில் களமிறங்குவாரா ரிஷப் பண்ட்? வெளியான பரபர தகவல்!
டெல்லி: ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் டெல்லி அணி சார்பாக ரிஷப் பண்ட் களமிறங்குவாரா அல்லது ஓய்வில் இருப்பாரா என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற கார் விபத்தில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சிக்கினார். டெஸ்ட் அணிக்கு துணை கேப்டனாக பொறுப்பு வகித்த ரிஷப் பண்ட் கிரிக்கெட் வாழ்க்கை ஒரே நாளில் மொத்தமாக மாறியது. அதன்பின் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின் நீண்ட மாதங்கள் ஓய்வில் இருந்தார்.

இதனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம் செய்யப்பட்டார். ரிஷப் பண்ட் வெறும் பார்வையாளராக மட்டுமே சில போட்டிகளில் கலந்து கொண்டார். அதன்பின் நன்றாக நடக்க தொடங்கிய பின் என்சிஏ-யில் பயிற்சியை தொடங்கினார். பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் உள்ளிட்டோருடன் இணைந்து என்சிஏவில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
அதேபோல் காயங்கள் குணமடைந்தாலும் முழு ஃபிட்னஸை மீண்டும் எட்டுவதற்கு ரிஷப் பண்ட்-க்கு இன்னும் சில மாதங்கள் தேவை என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே என்சிஏ மற்றும் ஜேஎஸ்டபிள்யூ சார்பாக நடத்தப்பட்ட சில போட்டிகளில் ரிஷப் பண்ட் களமிறங்கி சிறப்பாக பேட்டிங் செய்த வீடியோக்கள் வெளியாகியது. இதனால் ஐபிஎல் தொடரில் களமிறங்க வாய்ப்பிருப்பதாக பார்க்கப்பட்டது.
ஆனால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் என்பதால், அவர் விக்கெட் கீப்பிங் செய்யும் அளவிற்கு இன்னும் ஃபிட்னஸை எட்டவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதற்கு சில மாதங்கள் தொடர் பயிற்சி செய்ய வேண்டும் என்பதால், சில வாரங்கள் வீட்டில் இருக்கிறார். அதேபோல் முன்னாள் கேப்டன் தோனியுடன் அடிக்கடி சந்திப்புகளை நடத்தி பார்ட்டி செய்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்த ஐபிஎல் சீசனில் ரிஷப் பண்ட் இம்பேக்ட் பிளேயராக மட்டுமே டெல்லி அணிக்காக விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்பேக்ட் பிளேயராக மட்டுமே களமிறங்கும் பட்சத்தில் ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட வாய்ப்புகள் மிகவும் குறைவாகும். இதனால் ஜூன் மாதத்திற்கு பின்னரே ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Story first published: Monday, December 11, 2023, 19:36 [IST]
Other articles published on Dec 11, 2023


Click it and Unblock the Notifications