டெல்லி : ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறக்கப்படுவார் என்று அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் முதல் 15 நாட்களுக்கு அட்டவணை வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக முதல் 15 நாட்களுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டாலும், மொத்தமாக 21 போட்டிகள் நடக்கவுள்ளது. இதில் டெல்லி அணி தங்களது முதல் போட்டியில் பஞ்சாப் அணியையும், 2வது போட்டியில் ராஜஸ்தான் அணியையும், 3வது போட்டியில் சிஎஸ்கே அணியையும், 4வது போட்டியில் கொல்கத்தா அணியையும், 5வது போட்டியில் மும்பை அணியையும் எதிர்கொள்கிறது.

கடந்த சீசன் டெல்லி அணிக்கு மோசமானதாக அமைந்த நிலையில், இந்த சீசனில் கேப்டன் ரிஷப் பண்ட் கம்பேக் கொடுக்கவுள்ளார். அதேபோல் எஸ்ஏ20 லீக்கில் அசத்திய ஸ்டப்ஸ், இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி ப்ரூக் என்று மிரட்டலான அணியை ஏலத்தில் வாங்கியுள்ளனர். இருப்பினும் பிசிசிஐயிடம் இருந்து முழு ஃபிட்னஸ் சான்றிதழ் இதுவரை ரிஷப் பண்ட்-க்கு அளிக்கப்படவில்லை. இதனால் முதல் போட்டியில் இருந்தே ரிஷப் பண்ட் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் பேசுகையில், ரிஷப் பண்ட் பேட்டிங், ரன்னிங், விக்கெட் கீப்பிங் என்று அனைத்தையும் செய்ய தொடங்கியுள்ளார். அதனால் ஐபிஎல் தொடருக்குள் முழு ஃபிட்னஸையும் எட்டுவார் என்று நம்புகிறோம். இதனால் முதல் போட்டியில் இருந்தே ரிஷப் பண்ட் கேப்டனாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் முதல் 7 போட்டிகளில் வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாட வைக்க முடிவு செய்துள்ளோம்.
அந்த 7 போட்டிகளில் அவரின் ஃபிட்னஸ் மற்றும் உடல்நிலை பொறுத்து மீதமுள்ள போட்டிகளில் எப்படி விளையாட வைக்கலாம் என்று முடிவு எடுப்போம். அதேபோல் அன்ரிக் நார்கியே முழு ஃபிட்னஸையும் எட்டியுள்ளார். அவரும் முதல் போட்டியில் இருந்தே களமிறங்குவார். தற்போதைய சூழலில் ஜய் ரிச்சர்ட்சன் மட்டுமே முதல் பாதியின் சில போட்டிகளில் விளையாட மாட்டார். அதேபோல் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹாரி ப்ரூக் டெல்லி அணியின் நம்பர் 6 வீரராக களமிறக்கப்படுவார்.
ரிஷப் பண்ட்-ன் வருகை டெல்லி அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அதேபோல் மிட்செல் மார்ஷ் வளர்ச்சி, இந்திய இளம் வீரர்களான குமார் குசாக்ரா, ரிக்கி பூய், சமித் குமார் உள்ளிட்டோர் டெல்லி அணியின் பலத்தை அதிகரித்துள்ளனர். இதற்கு பின் டெல்லி அணியின் இயக்குநராக சவுரவ் கங்குலி மற்றும் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆகியோரின் கடுமையான உழைப்பும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.