மும்பை : 2024 ஐபிஎல் தொடரின் முடிவில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகுவார் என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அவருடன் மேலும் இரண்டு முக்கிய வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகுவார்கள் என கூறப்படுகிறது.
சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பங்கேற்றது. அந்தப் போட்டிக்கு முன் ரோஹித் சர்மா, சூர்யா குமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஒன்றாக வலை பயிற்சியில் ஈடுபட்டு இருந்ததாகவும், அப்போது ஹர்திக் பாண்டியா பேட்டிங் பயிற்சி செய்ய வந்தபோது அவர்கள் மூவரும் மைதானத்தின் மறுபுறத்துக்கு ஒன்றாக சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகிய இருவரும் ரோஹித் சர்மா பக்கம் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். 2024 ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பிளவு இருந்த போதும் தொடரின் முடிவில் அணி வீரர்கள் ஒன்று பட்டு விடுவார்கள் என சொல்லப்பட்டது.
ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் பிளவு இன்னும் பெரிதாக மாறி உள்ளது. இன்னும் ஒரு லீக் போட்டியில் மட்டுமே விளையாட உள்ளது அந்த அணி. இந்த நிலையிலும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரோஹித் சர்மா, சூர்யகுமார் மற்றும் திலக் வர்மா செயல்பட்டு இருப்பது அந்த அணியில் விரிசல் பெரிதாக இருப்பதை வெளிப்படையாக காட்டுகிறது.
2025 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளது. அந்த ஏலத்திற்கு முன் ஒரு அணி 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை விடுவித்து விட்டு, ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக வர்மாவை தக்க வைக்க திட்டமிட்டு இருந்தது.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா, ரோஹித் சர்மாவுடன் அணியை விட்டு விலக விருப்பம் தெரிவிப்பார்கள் என தெரிகிறது. எனவே, மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா, பும்ரா, இஷான் கிஷன் மற்றும் வேறு ஒரு வீரரை மட்டுமே தக்க வைக்க முடியும்.