ஜெய்ப்பூர் : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 4வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதனை தொடர்ந்து லக்னோ அணி தரப்பில் கேஎல் ராகுல் - டி காக் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

ராஜஸ்தான் அணி தரப்பில் போல்ட் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் 5வது பந்திலேயே டி காக் 4 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் டக் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து இளம் வீரர் பர்கர் பவுலிங்கில் ஆயுஷ் பதோனி 1 ரன்னில் ஆட்டமிழக்க, லக்னோ அணி 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் கேஎல் ராகுல் - தீபக் ஹூடா கூட்டணி இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
தீபக் ஹூடா எதிர்கொண்ட 2வது பந்திலேயே சிக்சர் அடிக்க, 7 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 57 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின் ஒவ்வொரு ஓவருக்கும் சிக்ஸ் அடிக்க வேண்டும் என்று தீவிரமாக இருந்தார் ஹூடா. சிறப்பாக பேட்டிங் ஆடிய அவர் சாஹல் பவுலிங்கில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் பூரன் - கேஎல் ராகுல் கூட்டணி இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 25 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுல், ஆட்டம் நழுவி சென்றதை உணர்ந்து அதிரடிக்கு திரும்பினார்.
பர்கர் ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி அடிக்க, மறுபுறம் பூரன் போல்ட் ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசி அசத்தினார். சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 35 பந்துகளில் அரைசதம் அடிக்க, லக்னோ அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான சந்தீப் சர்மாவை அட்டாக்கில் கொண்டு வந்தார் கேப்டன் சஞ்சு சாம்சன். அவர் வீசிய 17வது ஓவரின் முதல் பந்திலேயே கேஎல் ராகுல் 58 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஸ்டாய்னிஸை அஸ்வின் 3 ரன்களில் வெளியில் அனுப்பினார்.
இதனால் கடைசி ஒரு ஓவரில் லக்னோ அணி வெற்றிபெற 27 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ராஜஸ்தான் அணி சார்பாக வீச ஆவேஷ் கான் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் பூரனால் எந்த பவுண்டரியும் அடிக்க முடியாததால், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இதனால் ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான் அணி தரப்பில் போல்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.