ஜெய்ப்பூர் : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற 180 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து மும்பை அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ரோகித் சர்மா - இஷான் கிஷன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் போல்ட் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரில் ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து சந்தீப் சர்மா வீசிய 2வது ஓவரில் இஷான் கிஷன் டக் அவுட்டானார்.

இதையடுத்து சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா கூட்டணி இணைந்தது. 3வது ஓவரை வீசிய போல்ட் பவுலிங்கில் அபாரமாக விளையாடி 2 பவுண்டரிகளை விளாசிய சூர்யகுமார் யாதவ், சந்தீப் சர்மா வீசிய 4வது ஓவரின் முதல் பந்திலேயே 10 ரன்களில் வெளியேறினார். இதனால் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது. இதன்பின் முகமது நபி களமிறக்கப்பட்டார். சில ஓவர்கள் நிதானமாக ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ஆவேஷ் கான் வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு 6 சிக்ஸ் உட்பட 18 ரன்கள் சேர்க்கப்பட்டது.
பின்னர் முகமது நபி அதிரடியாக ரன்கள் சேர்த்த நிலையில், சாஹல் பவுலிங்கில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து கடந்த சீசனில் அசத்திய நேஹல் வதேரா - திலக் வர்மா கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் ஓவருக்கு ஒரு பவுண்டரியை விளாசியதால், மும்பை அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 72 ரன்கள் சேர்த்தது. இதன்பின் மும்பை அணி கியரை மாற்றியது. சாஹல் வீசிய 12வது ஓவரில் திலக் வர்மா 2 பவுண்டரிகளை விளாசினார்.
மறுபக்கம் ஆவேஷ் கான் பவுலிங்கில் நேஹல் வதேரா 2 சிக்சர்களை விளாசினார். இதன் காரணமாக 15 ஓவர்களில் மும்பை அணியின் ஸ்கோர் 131 ரன்களாக உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய திலக் வர்மா 38 பந்துகளில் சிக்சருடன் அரைசதம் அடிக்க, தொடர்ந்து அதே ஓவரில் நேஹல் வதேராவும் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். அதிரடியாக ஆடிய வதேரா அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 24 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவரை தொடர்ந்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 10 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கடைசி ஓவரில் டிம் டேவிட் - திலக் வர்மா கூட்டணி களத்தில் இருந்தது. சந்தீப் சர்மா வீசிய இந்த ஓவரின் முதல் பந்திலேயே திலக் வர்மா 65 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கோட்ஸி டக் அவுட்டாகினார். மீண்டும் 5வது பந்தில் டிம் டேவிட் 3 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை மட்டுமே சேர்த்தது. சிறப்பாக பவுலிங் செய்த சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.