சென்னை : 2024 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் தகுதி நீக்க (Eliminator) போட்டி நடைபெற உள்ளது. இதில் புள்ளிப் பட்டியலில் மூன்று மற்றும் நான்காவது இடங்களில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டியில் "ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற வேண்டும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோற்க வேண்டும்" என சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.
அதற்கு முக்கிய காரணம் பெங்களூரு அணியின் ரசிகர்கள் தான். முன்னதாக லீக் சுற்றில் தங்களின் கடைசி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அந்த போட்டியில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்தது. அதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெற்றது. முதல் எட்டு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பே இல்லை என கணிக்கப்பட்டிருந்த பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது.

அந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பெங்களூரு அணியின் ரசிகர்கள் எல்லை மீறி நடந்து கொண்டனர். குறிப்பாக சிஎஸ்கே ரசிகர்களை கேலி செய்தும், கிண்டல் செய்தும் தங்கள் அணியின் வெற்றியை கொண்டாடி இருந்தனர். அது மட்டும் இன்றி போட்டியின் முடிவில் பெங்களூரு அணி வீரர்களுக்கு கை கொடுக்க வேண்டி சிஎஸ்கே வீரர்கள் காத்திருந்தபோது, அதை கண்டு கொள்ளாமல் அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சில நிமிடங்கள் காத்திருந்த தோனி பொறுமை இழந்து கைகுலுக்காமல் ஓய்வறைக்கு சென்றார். அதையும் சர்ச்சையாக்கி தோனி மீது குற்றம் சுமத்தினர் பெங்களூரு ரசிகர்கள்.
இந்த நிலையில் தான் பிளே ஆஃப் சுற்றில் பெங்களூரு அணி தோல்வி அடைய வேண்டும், ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் போட்டியில் பெங்களூரு அணி தோல்வி அடைந்தால் அத்துடன் தொடரை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.