அகமதாபாத் : 2024 ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது.
இந்த தோல்விக்கு முக்கிய காரணமே ஆர்சிபி அணி வீரர்கள் நடந்து கொண்ட விதம்தான் என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.. 2024 ஐபிஎல் தொடரின் முதல் எட்டு போட்டிகளில் ஆர்சிபி ஒரு வெற்றியை மட்டுமே பெற்று இருந்தது. அப்போது அந்த அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ஒரு சதவீத வாய்ப்பு மட்டுமே இருந்தது.

அந்த மோசமான நிலையில் இருந்து மீண்ட ஆர்சிபி அணி அடுத்த ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. தனது கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய பின் ஆர்சிபி அணி வீரர்களும், ரசிகர்களும் வெற்றி மிதப்பில் இருந்தனர்.
அந்த வெற்றியை ஐபிஎல் கோப்பையை வென்றது போல கொண்டாடினர். அதிலும் உச்சகட்டமாக ஆர்சிபி வீரர்கள் போட்டி முடிந்த பின் தோனிக்கு கைகுலுக்க கூட மறந்து போய் வெற்றியை கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள்.
அடுத்த சில நாட்களிலேயே எலிமினேட்டர் போட்டி இருந்த நிலையில், அதற்கான தயார் மனநிலையில் ஆர்சிபி வீரர்கள் இல்லை என்பதையே இந்த போட்டியின் முடிவு நமக்கு காட்டுகிறது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது. அகமதாபாத் மைதானத்தில் பேட்டிங் செய்ய கடினமாக இருந்த நிலையில் அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.
அடுத்த சேஸிங் செய்த ராஜஸ்தான் அணி 6 விக்கெட்களை இழந்த போதும் சரியாக 19 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதையே ஒரு ஐபிஎல் கோப்பை வென்றதாக நினைத்துக் கொண்டாடிய ஆர்சிபி பணி நாக் - அவுட் போட்டியின் தீவிரத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதையே இந்த தோல்வி காட்டுகிறது.