டெல்லி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் பிரம்மாண்ட சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார். தோனியின் நீண்ட நாள் சிக்ஸர் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியையும் முந்தி முத்திரை பதித்து இருக்கிறார்.
அவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 46 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து இருந்தார். அவரது பேட்டிங்கில் 8 ஃபோர் மற்றும் 6 சிக்ஸ் அடித்தார். இந்த அதிரடி ஆட்டத்தின் போது ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை கடந்தார் சஞ்சு சாம்சன்.

வெறும் 159 இன்னிங்க்ஸ்களில் 200 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார் சஞ்சு சாம்சன். இந்திய அளவில் வேகமாக 200 சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் சஞ்சு சாம்சன்.
இதற்கு முன் தோனி 165 இன்னிங்ஸ்களில் 200 சிக்ஸர்களை அடித்து இருந்ததே இந்திய அளவில் சாதனையாக இருந்தது. அதை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவால் முறியடிக்க முடியவில்லை. இந்த நிலையில் அதை முறியடித்து முத்திரை பதித்து இருக்கிறார் சஞ்சு சாம்சன். தோனிக்கு அடுத்து விராட் கோலி 180 இன்னிங்க்ஸ்களிலும், ரோஹித் சர்மா 185 இன்னிங்ஸ்களிலும், சுரேஷ் ரெய்னா 193 இன்னிங்ஸ்களிலும் 200 சிக்ஸர்களை அடித்து இருந்தனர்.
ஐபிஎல்லில் அதிவேகமாக 200 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியல் -
சஞ்சு சாம்சன் – 159 இன்னிங்ஸ்
எம்எஸ் தோனி – 165 இன்னிங்ஸ்
விராட் கோலி – 180 இன்னிங்ஸ்
ரோஹித் சர்மா – 185 இன்னிங்ஸ்
சுரேஷ் ரெய்னா – 193 இன்னிங்ஸ்
டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 221 ரன்கள் குவித்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 201 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சஞ்சு சாம்சன் அடித்த 86 ரன்கள் வீணாகிப் போனது.