மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வரும் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு பிசிசிஐ தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் பந்து வீசும் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் முதல் 19 ஓவர்களை வீசி முடித்திருக்க வேண்டும். மாறாக கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டால் அந்த அணியின் 20வது ஓவரின் போது பவுண்டரி எல்லைக்கு அருகே நான்கு ஃபீல்டர்கள் மட்டுமே நிற்க முடியும். அது மட்டுமின்றி பந்து வீசும் அணியின் கேப்டனுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஒரே ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையும் இது போல நடந்தால் 24 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையும் இதே தவறு நடந்தால் அந்த கேப்டனுக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இரண்டாவது முறையாக குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காததால் அபராதம் செலுத்த இருக்கிறார். முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்காமல் தாமதம் செய்தது. அப்போது சஞ்சு சாம்சனுக்கு முதல் முறை அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டாவது முறையாக அதே தவறை செய்து அபராதம் செலுத்த இருக்கிறார் சஞ்சு சாம்சன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் ஐந்து லீக் போட்டிகள் மற்றும் பிளே-ஆஃப் சுற்றுப் போட்டிகள் இருக்கும் நிலையில் அதில் ஏதேனும் ஒரு போட்டியில் இதே போல ஓவர்களை வீசி முடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டால் சஞ்சு சாம்சனுக்கு தடை விதிக்கப்படும்.
தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிக ரன்கள் குவித்த வீரராக இருக்கிறார் சஞ்சு சாம்சன். மேலும், கேப்டனாக ஒன்பது போட்டிகளில் எட்டு வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இருக்கிறார், இந்த நிலையில் பிளே-ஆஃப் சுற்றின் போது சஞ்சு சாம்சனுக்கு தடை விதிக்கபட்டால் அது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும்.