ஐபிஎல் 2024 சென்னையில் இம்முறை போட்டி நடக்குமா? தோனியின் கனவுக்கு நாடாளுமன்ற தேர்தலால் சிக்கல்
மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே இறுதிவரை நடைபெற பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த அட்டவணையை உறுதி செய்வதில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று இருக்கிறது. காரணம் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தல் பல கட்டமாக இந்தியா முழுவதும் நடைபெறும் இந்தத் தேர்தல் நடத்தப்படும் நிலையில் ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதா? இல்லை பாதி வெளிநாட்டில் நடத்துவதா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் அட்டவணையை தயாரிப்பதில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால் இந்தியாவில் தான் தொடரை முழுமையாக நடத்த வேண்டும் என பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி நாடாளுமன்றத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு அதற்கு ஏற்றார் போல் ஐபிஎல் அட்டவணையை முடிவு செய்ய பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறது. அதாவது நாடாளுமன்றத் தேர்தல் பல கட்டங்களாக நடைபெறும்.
ஒவ்வொரு கட்டமும் நாட்டின் ஒவ்வொரு பகுதியில் நடத்தப்படும். உதாரணத்திற்கு தமிழகம் கேரளாவில் ஒரு தேதியிலும் கர்நாடகாவில் ஒரு தேதியிலும் ஆந்திராவில் ஒரு தேதியிலும் மகாராஷ்டிராவில் ஒரு தேதியிலும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும். அதற்கு ஏற்ப தேர்தல் நடைபெறாத இடத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தி விட்டு தேர்தல் முடிந்த பிறகு அந்தந்த மாநிலங்களில் போட்டியை நடத்துவது என்று பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
அதன்படி சென்னையில் தன்னுடைய கடைசி போட்டியில் விளையாடி ரசிகர்கள் முன் விடை பெற வேண்டும் என்று தோனி நினைத்து வருகிறார். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக சென்னையில் கடைசி போட்டி நடைபெறாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஏழு லீக் ஆட்டம் நடைபெற வேண்டிய இடத்தில் வெறும் ஒன்று அல்லது எதுவுமே நடக்காத சூழலும் உருவாகி இருக்கிறது.
இல்லையெனில் கடந்த காலங்களைப் போல ஐபிஎல் தொடர் வெளிநாட்டிலும் நடத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. இல்லையெனில் கொரோனா காலத்தில் வெறும் மூன்று மைதானங்களில் நடத்தப்பட்டது போல் போட்டி நடத்தப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் தோனியின் கனவு நிறைவேறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
Story first published: Tuesday, December 19, 2023, 12:27 [IST]
Other articles published on Dec 19, 2023


Click it and Unblock the Notifications