கொல்கத்தா : பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் ஷஷான்க் சிங் அடித்த சிக்ஸர்களால் வெற்றி பெற வேண்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. குறிப்பாக 18வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். அதில் ஒரு சிக்ஸ் அதிக உயரத்துக்கு சென்றது. அதைப் பார்த்து எதிரில் நின்று இருந்த சக பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 261 ரன்கள் குவித்தது. மிகப் பெரிய இலக்கான 262 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது பஞ்சாப் கிங்ஸ். அந்த அணிக்கு அதிரடி துவக்கம் அளித்தார் பிரப்சிம்ரன் சிங். அவர் 18 பந்துகளில் அரசைதம் கடந்து பின்னர் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பேர்ஸ்டோ கடைசி வரை களத்தில் நின்று சதம் அடித்தார். இடையே வந்த ரூசோ 16 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த ஷஷான்க் சிங்கும் வேகமாக ரன் குவித்தார். ஆனாலும், கடைசி 4 ஓவர்களில் 52 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது பஞ்சாப் கிங்ஸ்.
அது போன்ற நிலையில் ஒரு ஓவரில் குறைவாக ரன் எடுத்தாலும் பஞ்சாப் அணிக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டு தோல்வி அடைய நேரிடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், ஷஷான்க் சிங் சிக்ஸர் மழை பொழிய முடிவு செய்தார். 17வது ஓவரிலேயே மூன்று சிக்ஸ் அடித்தார். அடுத்து 18வது ஓவரை வீச வந்தார் ஹர்ஷித் ராணா வீசினார். அந்த ஓவரில் அதிக ரன்கள் எடுத்தால் பஞ்சாப் அணியின் வெற்றி உறுதியாகி விடும் என்ற நிலையில் அந்த ஓவரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்தார் ஷஷான்க். மறுபுறம் சதம் அடித்த பேர்ஸ்டோ அவர் அடித்த பெரிய சிக்ஸரை பார்த்து வாயை பிளந்தார். பின்னர் 18.4 ஓவரில் எல்லாம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது.