சென்னை : கடந்த ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் தூணாக இருந்து வரும் சிவம் துபே, கடந்த நான்கு போட்டிகளில் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.
தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான தங்களின் கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே அணி சொதப்பினால் பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே, அந்தப் போட்டியில் சிவம் துபே அதிரடியாக ஆடி அதிக ஸ்ட்ரைக் ரேட்டில், அதிக ரன்கள் குவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் சிறப்பாக செயல்பட்டு வந்த சிவம் துபே கடந்த நான்கு போட்டிகளில் தான் ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். இந்த நான்கு போட்டிகளில் மட்டும் தொடர்ந்து இரண்டு முறை டக் அவுட் ஆகி உள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 21 ரன்களும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்களும் மட்டுமே எடுத்தார்.
அதற்கு முன்பு ஒவ்வொரு போட்டியிலும் 30 முதல் 60 ரன்கள் வரை எடுத்து இருந்தார். அதிலும் அவர் வந்தாலே சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ஓவர் கொடுக்காமல் தவிர்த்தன எதிரணிகள். தன்னால் வேகப் பந்துவீச்சாளர்களின் ஓவர்களிலும் ரன் குவிக்க முடியும் என நிரூபித்து எந்த பந்துவீச்சாளர் வீசினாலும் சிக்ஸர் அடித்து இருந்தார்.
ஆனால், ஏப்ரல் 30 அன்று இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டது முதலே ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங் பலவீனமாக மாறி உள்ளது. இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அவர் ரன் குவிப்பதன் மூலம் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற உதவுவது மட்டுமில்லாமல், அவர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்கும் வாய்ப்பும் கிடைக்கக்கூடும். எனவே அவர் தனது எதிர்காலத்தை மனதில் வைத்து இந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.