ஐதராபாத் : ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற எட்டாவது லீக் ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியை காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடித்து ஓட விட்டது. இந்த போட்டியில் ஒரு மிகப்பெரிய வரலாற்று சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.
ஒரே போட்டியில் முதல் முறையாக இரு அணிகளும் சேர்ந்து 500 ரன்கள் மேல் அடித்திருக்கிறார்கள். ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமானது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதையுமே வித்தியாசமாக செய்கிறேன் என்று அடிவாங்கும் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

தம் வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவுகளில் இதுவும் ஒன்று என்பதை ஹர்திக் பாண்டியா பின்னர் புரிந்து கொண்டு இருப்பார். ஏன் என்றால், அப்படி ஒரு அடி வாங்கி இருப்பார். ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் மாயங் அகர்வால் 11 ரன்களில் ஆட்டம் இழக்க, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் மற்றும் இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா ஆகியோர் மும்பை பந்துவீச்சை சிதறடித்தனர்.
24 பந்துகளில் 62 ரன்கள் விளாச அபிஷேக் ஷர்மா 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் பத்து ஓவர்லே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் குவித்தது. இதை அடுத்து ஹென்ரிச் கிளாசன் மற்றும் எய்டன் மார்க்கரம் ஜோடி சேர்ந்து இறுதிக்கட்டத்தில் வாண வேடிக்கை காட்டினர். இதில் கிளாசன் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை இன்றும் வெளிப்படுத்தினார்.ஏழு சிக்ஸர், 4 பவுண்டரி என 34 பந்துகளை எதிர்கொண்ட அவர் 80 ரன்கள் குவித்தார்.
இதேபோன்று டைட்டன் மார்க்கரம் 28 பந்துகளில் 42 ரன்கள் சேர்க்க ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற பெருமையை பெற்றது. மும்பை அணியில் அறிமுகமான மாபாகா என்ற தென்னாப்பிரிக்கா வீரர் நான்கு ஓவர்களுக்கு 66 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதனை அடுத்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.
இவ்வளவு பெரிய இலக்கை எடுக்க வேண்டும் என்றால் முதலில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டும் என்பதை புரிந்து கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இசான் கிஷன் ஜோடி அதிரடி காட்டியது. குறிப்பாக இசான் கிஷன் 13 பந்துகளில் எல்லாம் 34 ரன்கள் விளாசினார். இதில் நான்கு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் அடங்கும். எனினும் சேபாஸ் அஹமது ஓவரில் தொடர்ந்து சிக்சர் அடிக்க முயற்சி செய்தபோது அவர் கேட்ச் ஆனார்.
முதல் விக்கெட்டுக்கு மூன்று புள்ளி இரண்டு ஓவர்லெலாம் மும்பை இந்தியன்ஸ் அணி 56 ரன்களை கடந்தது. இதனை அடுத்து ரோகித் சர்மா மூன்று சிக்சர், ஒரு பவுண்டர் என 12 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார். மும்பை இந்தியன்ஸ் அணியில் வந்த வீரர்கள் எல்லாம் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். எனினும் அடிக்கின்ற எல்லா பந்தமும் சிக்ஸருக்கு போகுமா? சில பந்துகள் கேட்ச் ஆகி அவர்கள் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை இழக்க தொடங்கினர்.
14 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிலையில் திலக் வர்மா மட்டும் தன்னுடைய திறமையில் வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பதற்றத்தை கொடுத்தார். 34 பந்துகளை எதிர் கொண்ட அவர் 64 ரன்கள் விளாசினார். இதில் ஆறு சிக்ஸர்களும், இரண்டு பவுண்டர்களும் அடங்கும். ஒரு கட்டத்தில் ஹைதராபாத் அணியின் ஸ்கோரை மும்பை எட்டி விடுமா என்ற அச்சத்தில் காவியா மாறன் உட்பட ஹைதராபாத் அணி நிர்வாகம் சோகத்தில் இருந்தனர்.
எனினும் கேப்டன் பேட் கம்மின்ஸ் தன்னுடைய அபார பந்துவீச்சால் திலக் வர்மா விக்கெட்டை வீழ்த்தினார். இது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனை ஏற்படுத்தியது. இதேபோன்று உனாட்கட்டும் இறுதிக்கட்டத்தில் நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்து வீச ஹர்திக் பாண்டியா 24 ரன்களில் வெளியேறினார். டிம் டேவிட் மட்டும் தனி ஆளாக நின்று போராட மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் குவித்தனர். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தமாக 523 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசினர் இது டி20 கிரிக்கெட் அணிகள் மிகப்பெரிய ரெகார்ட் ஆகும்.