ஐபிஎல் வரலாற்றில் முதல் 10 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி சாதனை.. 17 வருடத்தில் இப்படி நடந்ததே இல்ல
ஐதராபாத் : ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியை சன்ரைசர்ஸ் அணி ஓட ஓட விரட்டி இருக்கிறது. ஐபிஎல் தொடங்கி தற்போது 17-வது சீசன் நடைபெறுகிறது. இந்த 17 ஆண்டுகளிலும் இப்படி ஒரு சாதனையை இதுவரை எந்த அணியும் செய்ததில்லை என்ற நிலையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்படுத்திருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் மாயங் அகர்வால், 13 பந்துகளை எடுத்துக்கொண்டு 11 ரன்கள் தான் சேர்த்தார்.

எனினும் அவருக்கு துணையாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் ருத்ரதாண்டவம் ஆடினார். டிராவிஸ் ஹெட்டை, இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். உலகக் கோப்பையில் எப்படி இந்திய அணிக்கு இறுதி ஆட்டத்தில் வில்லனாக வந்தாரோ, அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கையை குலைக்கும் விதமாக டிராவிஸ் ஹெட் ஆடினார்.
24 பந்துகளை எதிர்கொண்ட அவர் 62 ரன்கள் விளாசினார். இதில் ஒன்பது பௌண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். அவருக்கு ஈடு கொடுத்த இந்திய வீரர் அபிஷேக் ஷர்மாவும் 23 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். இதில் ஏழு, சிக்ஸர் 3 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் பத்து ஓவரிலே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் குவித்து இருக்கிறது.
இதன் மூலம் முதல் பத்து ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற பெருமையை சன்ரைசஸ் பெற்றிருக்கிறது. 2021 ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் இதே சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி மூன்று விக்கெட்டுகள் இழந்து 10 ஓவர் முடிவில் 131 ரன்கள் குவித்து இருந்தது. அதற்கு முன்பாக இதே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 2014 ஆம் ஆண்டு மூன்று விக்கெட் இழப்பிற்கு 131 குவித்து இருந்தது.
2008 ஆம் ஆண்டு டெக்கான் அணிக்கு எதிராக மும்பை விக்கெட் இழப்பின்றி 10 ஓவர் முடிவில் 13 ரன்கள் குவித்து இருந்தது. இந்தப் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் 2016 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக பெங்களூர் அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications