மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக கைப்பற்றுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் அதைவிட சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகவும் முக்கியம் எது என்றால் தோனிக்கு இதுதான் கடைசி சீசனா இல்லை மீண்டும் ஒருமுறை விளையாடுவாரா என்பது தான்.
42 வயது ஆகியிருக்கும் தோனி தற்போது நீளமுடியை வளர்த்துக் கொண்டு ரசிகர்களுக்காக கடைசி ஒரு முறை விளையாடுகிறார் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் தோனி ஓய்வு முடிவில் தான் இருக்கிறாரா? இல்லையா என்பது குறித்து இன்னும் நிலையான தகவல் வெளியாகவில்லை.

ஏனென்றால் இளம் வீரர்களுக்கு டப் கொடுக்கும் விதமாக தோனி தற்போது பேட்டிங் செய்து வருகிறார். குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நெருக்கடியான கட்டத்தில் களமிறங்கிய தோனி 3 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் விளாசி அசத்தினார். மேலும் தோனிக்கு சாதகமான விதிகளும் தற்போது ஐபிஎல் தொடரில் இருக்கிறது.
மேலும் தோனி நல்ல உடல் தகுதியுடன் இருப்பதால் இதுதான் கடைசி சீசனா இல்லை மீண்டும் ஒரு ஆண்டு விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் தோனியின் உற்ற நண்பரும் சிஎஸ்கே அணியின் ஜாம்பவானுமான சுரேஷ் ரெய்னாவிடம் இது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. தோனி நல்ல உடல் தகுதியில் இருக்கிறார். இவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சுரேஷ் ரெய்னா, தோனி நிச்சயம் 2025 ஆம் ஆண்டு சீசனில் விளையாடுவார் என்று கூறினார். மேலும் தோனி கிரிக்கெட் வர்ணனையை ஆங்கிலத்தில் கேட்காமல் போஜ்புரியிலும் கேட்பதாக ரெய்னா குறிப்பிட்டார். போஜ்புரியில் நல்ல முறையில் கிரிக்கெட் வர்ணனை செய்வதாக தம்மிடம் தோனி பாராட்டியதாகவும் ரெய்னா குறிப்பிட்டார்.
ரெய்னா சொன்ன இந்த பதில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. ஏனென்றால் ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றவுடன் தோனி ஓய்வு பெற்று விடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால் அப்போது இது குறித்து பேசிய ரெய்னா, தோனி மீண்டும் விளையாடுவார் என்று பதில் அளித்தார். ரெய்னா சொன்னது போல் தோனி நடப்பு சீசனின் விளையாடினார். இதனால் தற்போது மீண்டும் ரெய்னா அவர் விளையாடுவார் என தெரிவித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.