ஐதராபாத் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் நடராஜன் சிறப்பாக செயல்பட்டு அசத்தி வருகிறார் நடப்பு டி20 உலக கோப்பையில் நடராஜன் இடம் பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எனினும் காயம் அடைந்த பிறகும் ஒவ்வொரு ஆண்டும் நடராஜன் தன்னையே புதிதாக மெருகேற்றி ஜெயித்து வருகிறார். இதில் நடராஜன் போட்டியில் இறுதிக்கட்டத்தில் எவ்வாறு பந்து வீசுவது, தன்னுடைய வெற்றியின் ரகசியம் என்ன என்பது குறித்தும் பேசியிருக்கிறார். அதை தற்போது பார்க்கலாம்.

கடந்த நான்கு ஆண்டுகளாக இறுதிக்கட்ட ஓவர்களில் பந்து வீசுவதே என்னுடைய பணியாக நான் கருதி வருகின்றேன். இதன் மூலம் என்னுடைய நம்பிக்கையும் அதிகரித்திருக்கிறது. எனக்கு பேட் கம்மின்ஸ் நல்ல உறுதுணையாக இருக்கிறார். என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கிறார்.எனக்கு பல நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்திருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் பனிப்பொழிவு என்பது பெரிய பிரச்சினை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் ஈரமான பந்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து நான் கடுமையாக பயிற்சி எடுத்தேன். நீங்கள் யாக்கரை வீசும் போது அதில் ஒரு பிரச்சனையும் இருக்கிறது. அதில் நீங்கள் கொஞ்சம் தவறாக வீசினாலும் பந்து சிக்ஸருக்கு செல்லும். இதனால் பனிப்பொழிவு இருக்கிறதா இல்லையா என்பதை எல்லாம் பற்றி யோசிக்காமல் நாம் சரியாக பந்து வீசுகிறோமா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் விளையாடும் மைதானம் கொஞ்சம் பெரியதாக இருப்பதால் நான் மெதுவாக பவுன்சர் வீசும் யுத்தியை கையாண்டு வருகிறேன்.அது எனக்கு நன்மையை தருகின்றது.
தற்போது ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்கள் வீசலாம் என்பது பந்துவீச்சாளர்களுக்கு நன்மையாக பார்க்கப்படுகிறது. உங்களிடம் ஒரு திறமை மட்டும் இருந்தால் அது போதாது. நடப்பு உலகில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் நீங்கள் தொடர்ந்து ஏதேனும் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு வரவேண்டும். எனவே நான் பந்துவீச்சில் பல புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு வருகின்றேன். இதில் புவனேஸ்வர் குமார் மற்றும் தமிழக கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ஆகியோர்களின் பங்கு எனக்கு மிகவும் உதவுகிறது என்று நடராஜன் கூறியுள்ளார்.