டெல்லி : 2024 ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய போட்டி. கேட்ச் பிடித்த பின் பவுண்டரி எல்லையை ஃபீல்டர் தொட்ட நிலையில் கேட்ச் என அம்பயர்கள் அறிவித்தனர். அதனால் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்ததாகவும், இனி ரிவ்யூ பார்க்க தொழில்நுட்பத்தையே பயன்படுத்த வேண்டாம் எனவும் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். .
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தூக்கி அடித்த பந்தை பவுண்டரி எல்லைக்கு அருகே இருந்த டெல்லி அணியின் ஃபீல்டர் ஷாய் ஹோப் கேட்ச் பிடித்தார்.

அந்த பந்தை அவர் கேட்ச் பிடிக்கும் போது அவரது கால்கள் பவுண்டரி கோட்டை உரசிய நிலையில் இருந்தது. அதில் சந்தேகம் இருந்ததால் அதை மூன்றாவது அம்பயர் சரி பார்த்தார். அப்போது பல கோணங்களிலும் பார்க்காமல் அவசரகதியில் அவுட் என அறிவித்தார்.
ஆனால், ரீப்ளேவை பார்த்த அனைவருக்கும் ஷாய் ஹோப் கால் பவுண்டரி கோட்டை தொட்டது போலவே இருந்தது. மூன்று எல்லையை ஓபன் கால்கள் தொட்டது போலவே அனைவருக்கும் தோன்றியது. இதை அடுத்து சஞ்சு சாம்சன் பெரும் ஏமாற்றத்துடன் வெளியேறினார். பலரும் இது அவுட் இல்லை என விமர்சனம் செய்யத் துவங்கினர்.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 222 ரன்கள் என்ற பெரிய இலக்கை சேஸிங் செய்தது. சஞ்சு சாம்சன் மட்டுமே ராஜஸ்தான் அணியில் நிலையாக நின்று ஆடிக் கொண்டிருந்தார் அவர் 86 ரன்கள் அடித்த நிலையில் இந்த தவறான தீர்ப்பால் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின் ராஜஸ்தான் அணி சரிந்தது. 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் முன்னாள் வீரர் ஜாகிர் கான், "அந்த முடிவு போட்டியை டெல்லி அணியின் பக்கம் மாற்றிவிட்டது. டிவி அம்பயர் தனது முடிவை அறிவிக்கும் முன் நேரத்தை எடுத்துக்கொண்டு ரீப்ளேவை பார்த்திருக்கலாம். ஃபீல்டருடைய கால்கள் பவுண்டரி கோட்டை தொட்டது போலத்தான் இருக்கிறது. இது மிகவும் சிக்கலான தீர்ப்பு. எனவே அம்பயர் அதை பல்வேறு கோணங்களில் சரி பார்த்து இருக்கலாம்" என்றார்.
அதேபோல முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறுகையில், "சஞ்சு சாம்சனுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பால் போட்டி மாறியது. இதில் சிலருக்கு வேறு கருத்து இருக்கலாம். ஆனால், நீங்கள் கேமராவின் வேறு கோணத்தில் பார்த்தால் அவரது கால் பவுண்டரி எல்லையை இரண்டு முறை தொடுவது தெரிகிறது. தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அதை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது" என காட்டமாக பேசினார்.