பெங்களூர் : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலமாக, டி20 கிரிக்கெட்டில் 100 அரைசதங்கள் விளாசிய முதல் ஆசிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் பஞ்சாப் - ஆர்சிபி அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 45 ரன்களும், ஷஷாங்க் சிங் 8 பந்துகளில் 21 ரன்களும் விளாசினர். ஆர்சிபி அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணி தரப்பில் விராட் கோலி - டூ பிளஸிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் சாம் கரன் வீசிய 2வது பந்திலேயே ஸ்லிப் திசையில் எட்ஜாகி கேட்ச் செல்ல, அதனை பேர்ஸ்டோவ் தவறவிட்டார். அந்த பந்து பவுண்டரியாகியது. இதனைத் தொடர்ந்து முதல் ஓவரிலேயே 4 பவுண்டரிகளை விளாசி விராட் கோலி அதிரடியாக பேட்டிங்கை தொடங்கினார்.
முதல் விக்கெட்டுக்கு 26 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்ட நிலையில், டூ பிளஸிஸ் 3 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கேமரூன் க்ரீன் 3 ரன்களிலும் வெளியேறினர். இதன்பின் வந்த ரஜத் பட்டிதர் ஒருமுனையில் நிதானமாக விளையாட, மறுமுனையில் நின்று கொண்டு விராட் கோலி ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். ரபாடா, ராகுல் சஹர், ஹர்சல் படேல் உள்ளிட்டோர் பந்துகளை பொளந்து கட்டினார் விராட் கோலி.
சிறப்பாக விளையாடிய விராட் கோலி 31 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி அடிக்கும் 51வது அரைசதம் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து கணக்கிட்டால், விராட் கோலி அடிக்கும் 100வது அரைசதம் இதுவாகும். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 100 அரைசதங்கள் விளாசிய முதல் ஆசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர்களான டூ பிளஸிஸ், ரஜத் பட்டிதர், மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், விராட் கோலி ஒற்றை ஆளாக நின்று வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 2 மாதங்கள் இடைவெளிக்கு பின் ஐபிஎல் தொடரில் நேரடியாக களமிறங்கிய விராட் கோலி, 2வது போட்டியிலேயே அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.