பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் ஷாரூக்கான் ரன் அவுட் ஆகி சென்றபோது விராட் கோலி அவரைப் பார்த்து கிண்டல் செய்வது போல சைகை செய்தார். இதை அடுத்து விராட் கோலிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா இரண்டு போட்டிகளில் இதேபோல விக்கெட் வீழ்ச்சிக்கு பின் முத்தத்தை பறக்க விட்டார். அதற்காக அவருக்கு முதல் முறை அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டாவது முறை அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதேபோல ஷாருக்கானை பார்த்து முத்தத்தை பறக்க விட்ட விராட் கோலிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய இந்தப் போட்டியில் குஜராத் முதலில் பேட்டிங் செய்து 147 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஷாருக்கான் தான் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்திருந்தார். ராகுல் டெவாடியா உடன் ஷாருக்கான் இணைந்து ஆடிய போது விராட் கோலியிடம் பந்து செல்வதை பார்க்காமல் ஷாருக்கான் ரன் ஓட முயன்றார்.
ஆனால் விராட் கோலி பந்தை எடுத்து துல்லியமாக ஸ்டம்ப்பை நோக்கி வீசினார். அதன் மூலம் ஷாருக்கான் ரன் அவுட் ஆனார். ஷாருக்கான் ரன் அவுட் ஆகி ஆடுகளத்தை விட்டு வெளியேறும் போது விராட் கோலி அவரைப் பார்த்து முத்தத்தை பறக்க விட்டார். இது போல ஆக்ரோஷமாகவோ, எதிரணி வீரரைப் பார்த்து சைகை செய்தோ கொண்டாட்டத்தில் ஈடுபடுவது ஐபிஎல் விதிமுறைகளின் படி தவறாகும். ஆனால், விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரிலேயே பலமுறை இது போல கொண்டாடி இருக்கிறார்.
விராட் கோலி ரசிகர்கள் அவரது சைகையை ரசித்தாலும் மற்ற ரசிகர்கள், ஹர்ஷித் ராணாவுக்கு தடை விதிக்கப்பட்டது போலவே விராட் கோலிக்கும் தடை விதிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். எனினும், ஐபிஎல் விதிகளின்படி விராட் கோலி முதல் முறை இந்த தவறு செய்வதாக கருதப்பட்டு அவருக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக விராட் கோலி வேறு ஒரு போட்டியில் அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போதும் அவருக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் 148 ரன்கள் என்று சிறிய இலக்கை நோக்கி சேஸிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.