மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா மிகப் பெரும் பின்னடைவை சந்தித்தார். இந்த நிலையில் கிரிக்கெட் வாழ்வில் மட்டுமல்லாது, அவரது சொந்த வாழ்விலும் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் அவரிடம் இருந்து விலகி இருப்பதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. இதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றாலும் சமூக வலை தளங்களில் காணப்படும் பதிவுகளின் அடிப்படையில் இந்த தகவல் பரவி வருகிறது. செர்பிய நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக்கை காதலித்த ஹர்திக் பாண்டியா கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் இருக்கிறார்.

இந்த நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஆனார். அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாவியது, அந்த அணியில் மிகப்பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதனால் கேப்டன் பதவியை இழந்த ரோஹித் சர்மா மட்டுமின்றி, பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோரும் அவருக்கு எதிராக திரும்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பெற்று மிக மோசமான நிலையில் தொடரை முடித்தது.
அடுத்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு ஹர்திக் பாண்டியா தயாராகி வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவி நடாஷா, ஹர்திக் பாண்டியாவின் எந்த சமூக வலைதள பதிவுகளையும் லைக் செய்வதில்லை எனவும், அவரது சமூக வலைதளப் பக்கத்தில் "நடாஷா ஸ்டான்கோவிக் பாண்டியா" என்ற பெயரிலிருந்து "பாண்டியா" என்பதை மட்டும் நீக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மார்ச் 4 அன்று நடாஷாவின் பிறந்தநாளுக்கு ஹர்திக் பாண்டியா வாழ்த்து சொல்லவில்லை என்பதையும் குறிப்பிட்டு, அவர்கள் இருவருக்கும் இடையே விரிசல் இருக்கலாம் என கூறி வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாகவே நடாஷா - ஹர்திக் பாண்டியா இடையே சமூக வலை தளத்தில் எந்த விதமான பரிமாற்றங்களும் நடக்கவில்லை எனவும், நடாஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹர்திக் பாண்டியாவும், தானும் இடம் பெற்றிருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார் எனவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் முதலில் ரெடிட் தளத்தில் வெளியானது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாத நிலையில் பலரும் இந்த தகவலை சமூக வலை தளங்களில் பரப்பி வருகின்றனர்.