மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறது. ஆனால், கவுதம் கம்பீர் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கிறார். அந்த அணி இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது. அந்த அணியை விட்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வர கம்பீர் ஒப்புக்கொள்வாரா? என்பதே அனைவரின் கேள்வி.
கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தார் கவுதம் கம்பீர். ஆனால், 2024 ஐபிஎல் தொடரில் அந்த அணியை விட்டு விலகி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மாறினார். அப்போது ஷாரூக் கான் - கம்பீர் இடையே பல மணி நேர பேச்சுவார்த்தை நடந்தது. இதன் பின்னணியை சுட்டிக்காட்டும் விமர்சகர்கள், இதன் காரணமாகவே கம்பீர் பிசிசிஐ அழைப்பை ஏற்பது சந்தேகம் என கூறி வருகின்றனர்.

2017 வரை கவுதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மூத்த வீரராக இடம் பெற்று இருந்தார். அதன் பின் ஓராண்டு டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார். அத்துடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற அவர், 2022 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக மீண்டும் ஐபிஎல் தொடருக்குள் காலடி எடுத்து வைத்தார்.
2022 மற்றும் 2023 ஐபிஎல் தொடர்களில் லக்னோ அணியை பிளே ஆஃப் சுற்று வரை அழைத்துச் சென்றார். அதன் மூலம் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கவுதம் கம்பீர் மீது பெரிய மரியாதை வைத்திருந்தார். இதன் இடையே, 2024 ஐபிஎல் ஏலத்திற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கானை சந்தித்தார் கவுதம் கம்பீர்.
அவர்கள் இருவரும் பல மணி நேரம் சந்தித்து பேசினர். அதன் முடிவில் ஷாருக்கான் பணம் குறிப்பிடப்படாத பிளாங்க் செக்கை கவுதம் கம்பீருக்கு அளித்ததாகவும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஷாருக்கான் அளிக்க முன்வந்த சம்பளம் மற்றும் கொல்கத்தா அணியுடனான முந்தைய உறவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கவுதம் கம்பீர், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை விட்டு விலகினார்.
இந்த சம்பவங்கள் எதுவும் சஞ்சீவ் கோயங்காவுக்கு முதலில் தெரியாது. பின்னர் ஊடகங்களில் இந்த தகவல் வெளியான போது அதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் கம்பீரை அழைத்து இது குறித்து பேசி இருக்கிறார். அவரை லக்னோ அணியிலேயே தக்க வைக்க முயன்றும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மீதான கம்பீரின் உறவு தான் அதற்கு காரணம் என அப்போது கூறப்பட்டது.
தற்போது கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது. இந்த நேரத்தில் பிசிசிஐ அவரை இந்திய அணிக்காக அழைக்கிறது. கவுதம் கம்பீர் நாட்டுப் பற்று மிக்கவர் என்பதால் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்பார் என பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது. அதே சமயம் ஷாருக்கான் மற்றும் கொல்கத்தா அணியுடனான தனது உறவை அத்தனை எளிதில் விட்டு விட முடியாமல் கவுதம் கம்பீர் தயங்கி வருவதாகவும், அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வர ஒப்புக்கொள்ள மாட்டார் எனவும் கூறப்படுகிறது.