லக்னோ: ரிஷப் பண்ட், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விக்கெட் இழந்த விதத்தைப் பார்த்து, முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். தன் கிரிக்கெட் வாழ்விலேயே இது போன்ற மோசமான ஒரு விஷயத்தை தான் பார்த்ததே இல்லை என அவர் கூறியிருக்கிறார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 237 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடிக் கொண்டிருந்தது. ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் அணியை காப்பாற்ற வேண்டிய நிலையில் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் அவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை. முதல் 16 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த நிலையில், அவர் சந்தித்த 17வது பந்தில், அஹ்மத்துல்லா ஓமர்சாய் வீசிய 9வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அப்போது அவர் கவர் திசையில் பந்தை தூக்கி அடிக்க முயன்றார். அதற்காக பிட்ச்சில் சில அடிகளை முன்னே வைத்து வந்த ரிஷப் பண்ட், பேட்டை சுழற்றினார். அப்போது அவரது கையில் இருந்து பேட் நழுவியது. பந்து டீப் கவர் திசையில் மேல் நோக்கிச் சென்றது. மறுபுறம் பேட் ஸ்கொயர் லெக் திசையில் பறந்து சென்றது.
ஒரே நேரத்தில் பேட்டும் பந்தும் வெவ்வேறு திசைகளில் பறந்தன. அந்த பந்து கேட்ச் பிடிக்கப்பட்டது. இதை அடுத்து ரிஷப் பண்ட் 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த ஆரோன் ஃபின்ச், "'தன் கிரிக்கெட் வாழ்விலேயே இது போன்ற ஒரு மோசமான விக்கெட்டை நான் பார்த்ததில்லை'" என ரிஷப் பண்ட் பொறுப்பற்ற முறையில் பேட்டை வீசி ஆட்டமிழந்ததைச் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் மிகப்பெரும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 128 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 12.8 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 99 ஆகவும் உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் பெறும் வீரராக இருக்கும் ரிஷப் பண்ட், பேட்டிங்கில் தொடர்ந்து ஏமாற்றத்தை அளித்து வருகிறார்.
மேலும் அது அவரது அணியின் தோல்விகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியிலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.