நீதான்யா ஒரிஜினல் ஃபினிஷர்.. 10 பந்தில் 30 ரன்.. 20வது ஓவரில் 4 சிக்ஸ்.. மரண அடி அடித்த அப்துல் சமத்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றதற்கு கடைசி ஓவர் வீசிய ஆவேஷ் கான் காரணம் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர். வேறு சிலரோ, 45 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்த எய்டன் மார்க்ரம் மற்றும் 34 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்த ஆயுஷ் பதோனி ஆகிய பேட்ஸ்மேன்கள் தான் காரணம் எனவும் சொல்லி வருகின்றனர்.
ஆனால், இவர்கள் மூவரையும் தாண்டி, இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஃபினிஷர் ஆன அப்துல் சமத் செய்த ஒரு விஷயம் தான், இந்த போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற ஒரு வகையில் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தபோது, 19 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது அப்துல் சமத் களத்தில் இருந்தார். அவர் 5 பந்துகளைச் சந்தித்து 4 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லர் ஒரு ரன் எடுத்துவிட்டு ஸ்ட்ரைக்கை அப்துல் சமத் வசம் கொடுத்தார்.
அதன் பிறகு, சந்தீப் சர்மா வீசிய அந்த 20வது ஓவரில் அப்துல் சமத் நான்கு சிக்ஸர்களை அடித்தார். அது இந்த போட்டியில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது. அந்த கடைசி ஓவரில் மட்டும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 27 ரன்களை எடுத்தது. 20 ஓவர்களில் மொத்தம் 180 ரன்கள் சேர்த்தது.
அப்துல் சமத் மொத்தம் 10 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்திருந்தார். நான்கு சிக்ஸர்களை விளாசி இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 300 ஆக இருந்தது. பின்னர் இந்த போட்டியில் கடைசி ஓவர் வரை போராடி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருவேளை அப்துல் சமத் அந்த நான்கு சிக்ஸர்களையும் அடிக்காமல் போயிருந்தால் என்ன நடந்திருக்கும் என அப்துல் சமத்-ஐ பலர் பாராட்டி வருகின்றனர்.
அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வெறும் 50 பந்துகளைச் சந்தித்து 111 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 222 ஆக உள்ளது. இரண்டு போட்டிகளில் மட்டும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்திருக்கிறார். மற்ற போட்டிகளில் எல்லாம் 20 ரன்கள் எடுத்த போதெல்லாம் அவரது ஸ்ட்ரைக் ரேட் 200க்கு மேல்தான் இருந்துள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 8 பந்துகளில் 22 ரன்கள், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 12 பந்துகளில் 27 ரன்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 11 பந்துகளில் 20 ரன்கள், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 10 பந்துகளில் 30 ரன்கள் அடித்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இந்த ஆண்டு 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. அதற்கு ஃபினிஷரான அப்துல் சமத்தும் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications