செஞ்சுரி அடித்த உடன் பேப்பரை எடுத்துக் காட்டிய அபிஷேக் சர்மா.. நெகிழ்ந்த ரசிகர்கள்.. என்ன மெசேஜ்
ஹைதராபாத்: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக வெறித்தனமாக விளையாடி 40 பந்துகளில் சதம் அடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா சதம் அடித்த பின் ஒரு செயலை செய்தார். அது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதற்கு முன் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்த நிலையில் இந்த போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது. அதே சமயம் நான்கு தோல்விகளால் துவண்டு போயிருந்த ரசிகர்களுக்கு சதம் அடித்த பிறகு ஒரு காகிதத்தில் ஒரு செய்தியை எழுதி தூக்கி காண்பித்தார் அபிஷேக் சர்மா.

இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 245 ரன்கள் எடுத்த நிலையில் 246 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடியது. அந்த அணியின் துவக்க வீரர்களான ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா முதல் விக்கெட்டுக்கு 171 ரன்களை சேர்த்து மிரட்டினர். ட்ராவிஸ் ஹெட் 37 பந்துகளில் 67 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 40 பந்துகளில் சதத்தை கடந்தார். பின்னர் 55 பந்துகளில் 141 ரன்கள் சேர்த்தார். 14 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களை விளாசினார்.
அபிஷேக் சர்மா 141 ரன்கள் எடுத்த நிலையிலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 256 என்பதாக இருந்தது. அவர் சதம் அடித்த பிறகு தனது பாக்கெட்டில் இருந்து காகிதம் ஒன்றை எடுத்து உயர்த்தி காண்பித்தார். அதில் "இது ஆரஞ்சு ஆர்மிக்காக" என எழுதப்பட்டிருந்தது. அதாவது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆரஞ்சு நிற உடையை அணிந்து அந்த அணிக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்காக என அந்த செய்தியில் சொல்லப்பட்டிருந்தது.
இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதுவும் 246 ரன்கள் என்ற இலக்கை 18.3 ஓவர்களில் எட்டியது. அபிஷேக் சர்மா 141 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்ததற்கு பிறகு ஹென்ரிச் கிளாசென் 21 ரன்களும், இஷான் கிஷன் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அவர்கள் வெற்றியை உறுதி செய்தனர். ஹைதராபாத் அணி தற்போது தான் விளையாடிய ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று நான்கு புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications