மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி தீவிர ரஜினி ரசிகர் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். தோனியின் சுயசரிதை திரைப்படம் வெளியான போது ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா ஐகானிக் ஸ்டைலான ”ஒரு தடவை சொன்னா.. நூறு தடவை சொன்ன மாதிரி” என்று வசனத்தை பேசிக் காட்டியது இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
சிஎஸ்கே அணிக்காக தோனி நீண்ட காலமாக ஆடி வந்த போது, தமிழ்நாட்டின் சினிம மற்றும் கலாச்சார ரசனையையும் தோனி கவனித்து வந்தார். இதனைத் தொடர்ந்து அதிகளவிலான தமிழ் சினிமா படங்களை தோனி தேடி தேடி பார்த்தார். சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜயை நேரில் சந்தித்தது கூட ட்ரெண்டாகியது.

அதேபோல் தோனி சோசியல் மீடியா பயன்படுத்திய போது, ரஜினிகாந்தின் கபாலி படத்தில் வருவதை போல், ஒரு சோஃபாவில் கெத்தாக அமர்ந்து மீள் உருவாக்கம் செய்திருந்தார். இது ரஜினி ரசிகர்களிடையே அதிகமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-ம் தன்னை ரஜினி ரசிகராக வெளிப்படுத்த தொடங்கியுள்ளார்.
தோனி எப்படி கபாலி படத்தின் ஐகானிக் போஸை மீள் உருவாக்கம் செய்து புகைப்படம் வெளியிட்டாரோ, அதேபோல் ரிஷப் பண்ட் தற்போது புகைப்படம் வெளியிட்டு ”தலைவா” என்றும் பதிவிட்டுள்ளார். ரிஷப் பண்ட்-ன் இந்த செயல்பாடுகள் தமிழ்நாடு ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தாலும், சில விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
ஏனென்றால் கடந்த சில மாதங்களாகவே ரிஷப் பண்ட்-ன் சோசியல் மீடியா செயல்பாடுகள் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தெருவோரம் இருந்த சிறுவர்களுடன் கோலி குண்டு விளையாடியதை எடுத்து வீடியோவாக பதிவிட்டிருந்தார். அதன்பின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால், அந்த போஸ்டை லைக் மற்றும் கமெண்ட் செய்த அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசு வழங்குவேன் என்று கூறியிருந்தார்.
இதனால் ரிஷப் பண்ட் தனது பிஆர் ஏஜென்சி நிர்வாகிகளிடம் இருந்து வெளி வர வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்தனர். தற்போது ரஜினிகாந்த் புகைப்படம் மூலமாக புதிய வகையில் விளம்பரம் தேடியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியில் ரிஷப் பண்ட் பிராண்ட் மதிப்பு குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. '