மும்பை : இந்திய கிரிக்கெட் அணி தற்போது தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு தயாராகி வரும் நிலையில், ஐபிஎல் தொடர்பான விவகாரங்களும் ஒரு சைடில் நடந்து கொண்டிருக்கிறது. ஐபிஎல் மெகா ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறும் நிலையில் அதற்கு முன்பாக எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
எத்தனை ரைட் டு மேட்ச் கார்டு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது குறித்து தற்போது விவாதங்களும் எழுந்து வருகின்றன. ஒரு சில அணிகள் ஒன்று அல்லது இரண்டு ரைட் டு மேட்ச் கார்டு போதும் என்று கூறுகிறார்கள். ஆனால் இது கொஞ்சம் கூட போதாது என நட்சத்திர கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் ஐபிஎல் தொடரில் வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பை பிசிசிஐ அதிக படுத்த வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஏனென்றால் ஒவ்வொரு வீரர்கள் மீதும் அணி நிர்வாகம் பல கோடி ரூபாய் முதலீடு செய்து அவரை வளர்த்து வருகிறது.
ஒரு அணியின் முக்கியமான வீரர்களை ஒன்று சேர்த்து கட்டமைக்க ஐபிஎல் அணிகள் படாத பாடு பட்டு வருகிறது.
இந்த சூழலில் மெகா ஏலம் நடத்துவதன் மூலம் அந்த அணியின் பலம் முடங்கிவிடும். இந்த சூழலில் ரைட்டு மேட்ச் கார்டு அல்லது வீரர்கள் தக்க வைக்கும் விஷயத்தில் பி சி சி ஐ தாராள மனதுடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு அணியிலும், ஒவ்வொரு முக்கியமான வீரர்கள் தொடர்வது தான் ஐபிஎல் கிரிக்கெட்டின் தனித்துவ விஷயமாக நான் கருதுகிறேன். நிச்சயமாக ரைட் டூ மேட்ச் கார்டு மற்றும் வீரர்கள் தக்க வைக்கும் வாய்ப்பை பி சி சி ஐ அதிகப்படுத்தும். ஒன்று மற்றும் இரண்டு என்பதெல்லாம் நிச்சயம் போதாது. என்னைக் கேட்டால் முக்கிய வீரர்கள் அனைவரும் தக்கவைக்கப்பட வேண்டும்.
இதற்கான வழியை பிசிசிஐ ஏற்படுத்தி தர வேண்டும் என்று ராயுடு கூறினார். இந்த கருத்தை சுரேஷ் ரெய்னாவும் ஒப்புக் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் மெகா ஏலம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ரெய்னா, ஐபிஎல் தொடருக்கு எது நல்லது என்பதை ஐபிஎல் நிர்வாக குழு நடைமுறைப்படுத்தும் என்று தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார். இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் விதி பயன்படுத்தப்படுமா பவுன்சர் விதியை மாற்றி அமைக்கலாமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.