ஐபிஎல் மெகா ஏலம்.. கடைசி நேரத்தில் ஜெட்டா நகருக்கு மாறியது ஏன்? இதுதான் காரணம்!
ஜெட்டா: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரியாத், துபாய், வியன்னா, சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்த ஆலோசித்து வந்த நிலையில், திடீரென ஜெட்டா நகரில் நடத்த முடிவு எடுத்திருப்பது ஏன் என்பதை பார்க்கலாம்.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் இம்மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடக்கும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இம்முறை மெகா ஏலம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. ஏனென்றால் 2008க்கு பின் ஏராளமான இந்திய நட்சத்திர வீரர்கள் மீண்டும் ஏலத்திற்கு வந்துள்ளனர்.

ரிஷப் பண்ட், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் என்று இந்திய அணிக்காக ஆடி வரும் பிராண்ட் வேல்யூ கொண்ட வீரர்களும் ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர். இதனால் மெகா ஏலத்தில் எந்த வீரர் எந்த அணியால் வாங்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு வேற லெவனில் இருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் ஏலம் தொடர்ந்து 2வது முறையாக வெளிநாட்டில் நடக்கவுள்ளது.
கடந்த சீசனுக்கான ஐபிஎல் ஏலம் துபாயின் கோகோ-கோலா அரங்கில் நடைபெற்றது. தற்போது சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ரியாத், துபாய், வியன்னா, சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் அனைவருக்கும் ட்விஸ்ட் கொடுக்கும் வகையில் ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படவுள்ளது.
ஜெட்டா நகரில் உள்ள அபடி அல்-ஜொகர் அரேனாவில் ஐபிஎல் மெகா ஏலம் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் உரிமையாளர்கள் தங்குவதற்கு அருகே உள்ள ஹோட்டல் ஷாங்ரி-லாவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே விளையாட்டுகள் மீதான முதலீடுகளை சவுதி அரேபியா அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே சவுதி அரேபியாவைச் சேர்ந்த கால்பந்து அணிக்காக தான் நட்சத்திர வீரர் ரொனால்டோ விளையாடி வருகிறார். அதேபோல் கடந்த ஆண்டு இந்தியா வந்த சவுதி அரேபியா இளவரசன் முகமது பின் சல்மான், ஐபிஎல் தொடரில் முதலீடு செய்வதில் ஆர்வமாக இருந்ததாக தகவல் வெளிவந்தது. ஐபிஎல் தொடரை ஹோல்டிங் நிறுவனமாக மாற்றி, அதன் பங்குகளை வாங்க விரும்புவதாக மத்திய அரசை அணுகியதாகவும் கூறப்பட்டது.
ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தை சவுதி அரேபியாவில் பிசிசிஐ நடத்தவுள்ளது ரசிகர்களிடையே பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சவுதி அரேபியாவில் இருந்து முதலீடுகளை ஈர்க்கவே பிசிசிஐ ஐபிஎல் மெகா ஏலத்தை ஜெட்டாவில் நடத்த முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications