IPL 2025: ஐபிஎல்-இல் 10 மேட்ச் நீக்கம்.. ஜியோவுக்கு கெட்ட செய்தி.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு
மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் 84 போட்டிகள் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பிசிசிஐ 74 போட்டிகளை மட்டுமே நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2023 முதல் 2027 வரையிலான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை பிசிசிஐ ஏலம் மூலம் விற்றபோது ஒவ்வொரு ஆண்டும் எத்தனை போட்டிகள் நடத்தப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு இருந்தது.
அதன்படி 2023 மற்றும் 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தலா 74 போட்டிகளும், 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தலா 84 போட்டிகளும், 2027 ஆம் ஆண்டில் 94 போட்டிகளும் நடத்த உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது பிசிசிஐ. ஆனால், தற்போது அந்த ஒப்பந்தத்தை மீறி 2025 ஐபிஎல் தொடரில் 84 போட்டிகளுக்கு பதிலாக 74 போட்டிகளை மட்டுமே நடத்த உள்ளது பிசிசிஐ.

அதனால், ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், இணையம் மற்றும் மொபைலில் ஒளிபரப்பி வரும் ஜியோசினிமா நிறுவனத்துக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கூடுதல் போட்டிக்கும் பல கோடிகளை ஈட்டலாம் என கணக்கிட்டு இருந்த இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் பிசிசிஐ எடுத்து இருக்கும் முடிவு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக கருதப்படுகிறது.
ஏன் திட்டமிட்டபடி போட்டிகளின் எண்ணிக்கையை பிசிசிஐ அதிகரிக்கவில்லை? என பிசிசிஐ வட்டாரத்தில் விசாரித்த போது சில முக்கிய தகவல்கள் கிடைத்தன. ஐபிஎல் தொடரில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் இடம்பெற்று உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரு ஆண்டில் சுமார் 11 மாதங்களுக்கு இடைவிடாமல் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுகிறார்கள். பிசிசிஐ கட்டுப்பாட்டில் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச போட்டிகளை பொறுத்தவரை வேகப் பந்துவீச்சாளர்களுக்கு போதிய ஓய்வு கிடைப்பதை பிசிசிஐ உறுதி செய்கிறது.
அதே போல, மூத்த வீரர்களுக்கும் சுழற்சி முறையில் ஓய்வு அளித்து வருகிறது. ஆனால், ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் சிறந்த வீரர்களை அனைத்து போட்டிகளிலும் விளையாட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதால் இந்திய அணி வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் ஓய்வு கிடைக்காது. சுமார் இரண்டு மாத காலம் இடைவிடாமல் பயணம் செய்து போட்டியில் பங்கேற்க வேண்டிய நிலை உள்ளது.
அதனால், 84 போட்டிகளாக ஐபிஎல் தொடரின் நீளத்தை அதிகரித்தால் ஒவ்வொரு வீரரும் மேலும் இரண்டு போட்டிகளில் ஆட வேண்டிய நிலை ஏற்படும். 2025 ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
நிச்சயமாக இந்திய அணி இந்த தொடரின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம்பெற்று இறுதிப்போட்டியில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை கருத்தில் கொண்டே பிசிசிஐ ஐபிஎல் தொடரில் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications