ஐபிஎல் தொடரால் பிசிசிஐ-க்கு அடித்த ஜாக்பாட்.. குஷியில் ஜெய் ஷா.. கோடிகளை கொட்டிய அம்பானி, டாடா
மும்பை: 2023 ஐபிஎல் தொடரில் பிசிசிஐ சுமார் 5120 கோடி லாபம் ஈட்டி உள்ளது. அதாவது ஒட்டு மொத்தமாக கிடைத்த வருமானத்தில் செலவு போக லாபம் மட்டுமே 5120 கோடி ஆகும். ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆண்டில் கிடைத்த மிகப்பெரிய லாபம் இதுவாகும். 2022 ஐபிஎல் தொடரில் பிசிசிஐக்கு 2367 கோடி ரூபாய் மட்டுமே லாபம் கிடைத்து இருந்தது.
அதைக் காட்டிலும் 116 சதவீதம் அதிக லாபத்தை ஐபிஎல் தொடரில் பிசிசிஐ ஈட்டி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக ஒளிபரப்பு உரிமம் மற்றும் விளம்பர ஒப்பந்தங்களை சுட்டிக்காட்டுகிறார்கள். 2022 ஐபிஎல் தொடருடன் அதற்கு முன் ஐந்து ஆண்டுகளுக்கு போடப்பட்டு இருந்த ஒளிபரப்பு உரிமம் மற்றும் விளம்பர உரிமங்கள் முடிவுக்கு வந்தன.

2023 ஆம் ஆண்டு முதல் புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டன. மீடியா உரிமை இந்த முறை தொலைக்காட்சி உரிமம் தனியாகவும், இணையதளம் மற்றும் மொபைலில் ஒளிபரப்பும் ஸ்ட்ரீமிங் உரிமம் தனியாகவும் விற்கப்பட்டன. ஸ்ட்ரீமிங் உரிமத்தை ஜியோ சினிமா 23,758 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் 23,575 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது.
இது ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஐபிஎல் முதல் 2027 ஐபிஎல் வரையிலான ஐந்து ஆண்டு உரிமத்துக்கு டிஸ்னி மற்றும் ஜியோசினிமா நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக 48390 கோடி ரூபாய் அளிக்க முன்வந்தன. அதேபோல ஐபிஎல் பெயருக்கான விளம்பர ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் பெற்றது. அந்த நிறுவனம் ஐந்து ஆண்டுகளுக்கு 2500 கோடி ரூபாய் கொடுக்க முன் வந்தது. இதை தவிர்த்து மைசர்க்கிள் 11, ரூபே, ஏஞ்சல் ஒன், சியட் ஆகிய நிறுவனங்கள் 1485 கோடி ரூபாய்க்கு விளம்பர ஒப்பந்தங்களை கையெழுத்திட்டன.
2022 ஐபிஎல் தொடரில் ஓராண்டு ஒளிபரப்பு உரிமத்தின் மதிப்பு 3780 கோடியாக இருந்தது. ஆனால், 2023 ஐபிஎல் தொடரில் ஓராண்டு ஒளிபரப்பு உரிமம் 8,744 கோடியாக அதிகரித்தது. இதற்கு முக்கிய காரணம், தொலைக்காட்சி உரிமம் மற்றும் ஸ்ட்ரீமிங் உரிமங்கள் தனித்தனியாக விற்கப்பட்டதே ஆகும். இதன் மூலம் 2023 ஐபிஎல் தொடரில் பிசிசிஐ 11,769 கோடி வருவாய் ஈட்டியது. அதே சமயம் ஐபிஎல் தொடரின் செலவுகளும் அதிகரித்தது. 2023 ஐபிஎல் தொடரை நடத்த 6648 கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறது பிசிசிஐ. செலவு போக லாபமாக 5120 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
அம்பானியின் ஜியோ சினிமா நிறுவனமும், டாட்டா நிறுவனமும் முந்தைய ஆண்டுகளை விட கூடுதல் வருவாய் கிடைக்க முக்கிய காரணமாக இருந்தன.


Click it and Unblock the Notifications