சென்னை: 2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை வாங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தோனி தற்போது 43 வயதாகும் நிலையிலும் 2025 ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளார். அதுவே அவரது கடைசி ஐபிஎல் தொடராகவும் இருக்கும் என கூறப்படுகிறது.
2025 ஐபிஎல் தொடரில் பங்கேற்றாலும் தோனியால் போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட முடியுமா? என்ற சந்தேகமும் உள்ளது. அவர் இம்பாக்ட் வீரராக மட்டும் இடம் பெறவே வாய்ப்பு அதிகம். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை. தோனியே 2008 முதல் இப்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார். அவருக்கு இணையாக சிறப்பாக விளையாடும் ஒரு வீரரை சிஎஸ்கே தேடி வருகிறது.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் இஷான் கிஷனுக்கு சிஎஸ்கே குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் எப்போதெல்லாம் இஷான் கிஷன் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றாரோ அப்போதெல்லாம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ஏலத்தில் வாங்க மற்ற அணிகளுடன் போட்டி போட்டு உள்ளது.
அதற்கு முக்கிய காரணம், அவர் தோனியின் மாநிலமான ஜார்கண்ட்டில் இருந்து வருவதோடு, சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் இருக்கிறார். ஜார்கண்ட் மாநில அணியில் தோனி ஆடாத போது இஷான் கிஷன் அவரது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஆடி இருக்கிறார். அவர் இதுவரை சிஎஸ்கே அணிக்காக ஆடாத போதும் மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்.
2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 15.5 கோடி சம்பளமாக கொடுத்து இஷான் கிஷனை வாங்கியது. தற்போது 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக அதிக வீரர்களை தக்க வைக்க முடியாது என்பதால் இஷான் கிஷனை மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணியில் இருந்து விடுவிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
அப்படி விடுவித்தாலும் ஏலத்தில் அவருக்காக மும்பை இந்தியன்ஸ் அணி போட்டி போடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில்தான், சென்னை சூப்பர் கிங்ஸ் இஷான் கிஷனை ஏலத்தில் வாங்க முடிவு செய்துள்ளது. அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமல்லாது பல்வேறு அணிகளும் ஏலத்தில் போட்டி போடும். அத்தனை அணிகளையும் மீறி சிஎஸ்கே அணி அவரை வாங்குவது கடினம்தான். அப்படியே வாங்கினாலும் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை "ரைட் டூ மேட்ச்" என்ற அட்டையை பயன்படுத்தி மீண்டும் தங்கள் அணிக்கு அவரை வாங்கிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.
ஆனால், அவருக்கான ஏலத் தொகை என்பது மிகவும் அதிகமாக இருந்தால் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை மீண்டும் தங்கள் அணிக்கு அழைத்துக் கொள்ளாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இஷான் கிஷனை சிஎஸ்கே அணியால் ஏலத்தில் வாங்க முடியாமல் போனால் நிச்சயம் வேறு ஒரு உள்ளூர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை சிஎஸ்கே அணி வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.