சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் இனி சிஎஸ்கேவின் கோட்டை இல்லை என சொல்லும் அளவுக்கு மோசமான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
2025 ஐபிஎல் தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதில் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.

மற்ற மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றன. அந்த இரண்டு போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்து வரலாற்றிலேயே மிக மோசமான நிகழ்வு ஒன்றை பதிவு செய்து இருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2008 ஐபிஎல் தொடருக்குப் பிறகு சமீபத்தில் சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி மாபெரும் வரலாறு படைத்திருந்தது.
அடுத்து அதே போன்ற வரலாறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் செய்திருக்கிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடைசியாக 2010 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது. தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வரலாறு படைத்திருக்கிறது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.
இதை அடுத்து இனியும் சென்னை சேப்பாக்கம் சிஎஸ்கே அணியின் கோட்டை இல்லை என ரசிகர்கள் விளாசி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணி தேர்வையும், போட்டிக்கான வியூகங்களையும் அனைத்து தரப்பு ரசிகர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தோனி 43 வயதில் விளையாடினாலும் அவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை என்பதும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த காரணங்களால் தான் சென்னை சேப்பாக்கத்தை சிஎஸ்கே அணி இழந்து வருகிறது என ரசிகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.