சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனையாவது ஏலத்தில் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில், தோனியால் முழு நேர விக்கெட் கீப்பராக செயல்பட முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது.
தோனி இனி இம்பேக்ட் வீரராக பேட்டிங்கின் போது மட்டுமே பயன்படுத்தப்படுவார் என சிஎஸ்கே வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்து உள்ளன. எனவே, அந்த அணி நிச்சயமாக ஒரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை ஏலத்தில் தேர்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

இந்திய அணியில் தோனிக்கு பின் விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட்டை வாங்க சிஎஸ்கே அணி ஆர்வமாக உள்ளது. ஆனால், ரிஷப் பண்ட்டுக்கு ஏலத்தில் மிகப்பெரிய அளவில் போட்டி இருக்கும். பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 110 கோடி ரூபாய் கையிருப்பில் இருக்கும் நிலையில் அந்த அணியே ரிஷப் பண்ட்டை வாங்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சிஎஸ்கே அணியிடம் 55 கோடி மட்டுமே ஏலத்தில் செலவிட கையிருப்பு தொகை உள்ளது. சிஎஸ்கே அணி தோனி உட்பட ஐந்து வீரர்களை சுமார் 65 கோடி ரூபாய்க்கு தக்க வைத்து இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஒரு அணி அதிகபட்சம் 120 கோடி ரூபாய் மட்டுமே வீரர்களுக்கு சம்பளமாக அளிக்க முடியும்.
எனவே ரிஷப் பண்ட்டை சிஎஸ்கே அணியால் வாங்க முடியாது. அடுத்து கே எல் ராகுல் இருக்கிறார். ஆனால், அவருக்கு ஏலத்தில் மிகப்பெரிய போட்டி இருக்கும் என கூறப்படுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரை வாங்க ஆர்வமாக உள்ளது. இவர்கள் இருவரையும் தவிர்த்துப் பார்த்தால், இஷான் கிஷன் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் மட்டுமே சர்வதேச அனுபவம் உள்ள இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக உள்ளனர்.
அவர்கள் இருவரையும் சிஎஸ்கே அணி வாங்க முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஷான் கிஷனை வாங்கவும் போட்டி கடுமையாக இருக்கும். அந்த வகையில் பார்த்தால் ஜிதேஷ் சர்மா மட்டுமே சிஎஸ்கே அணிக்கு எளிதான வாய்ப்பாக இருக்கிறார். அவரையும் சிஎஸ்கே அணி வாங்கவில்லை என்றால் உள்ளூர் வீரர்களை தான் ஏலத்தில் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.