கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் வர்ணனையாளர்களாகச் செயல்பட்டு வரும் ஹர்ஷா போக்ளே மற்றும் முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல் ஆகிய இருவரையும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நுழைய அனுமதிக்க முடியாது என பெங்கால் கிரிக்கெட் சங்கம் (CAB) பிசிசிஐக்கு கடிதம் எழுதி இருக்கிறது. இந்த தகவல் ஐபிஎல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திங்கள்கிழமை அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது. அந்தப் போட்டியின் போது, ஹர்ஷா போக்ளே மற்றும் சைமன் டவுல் வர்ணனை செய்வதற்காக வந்தால் மைதானத்திற்குள் அனுமதிக்க முடியாது என பெங்கால் கிரிக்கெட் சங்கம் போர்க்கொடி தூக்கி உள்ளது.

இதற்கு முக்கிய காரணம், ஈடன் கார்டன் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜியை விமர்சித்து அவர்கள் இருவரும் பேசி இருந்ததுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. 2025 ஐபிஎல் தொடரில் துவக்கத்தில் இருந்தே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், ஈடன் கார்டன் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருந்தன.
இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து ஈடன் கார்டன் மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தின் பிட்ச் இத்தனை காலம் வரை சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமானதாகவே இருந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு பிட்சில் மிகப்பெரிய மாற்றம் உள்ளது.
அங்கு சுழற்பந்து வீச்சாளர்களால் முன்பு போல ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களுக்கு ஏற்புடைய பிட்சை ஈடன் கார்டன் மைதானத்தின் பராமரிப்பாளர் ஏற்படுத்தவில்லை என விமர்சனம் செய்திருந்தது. அது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர், பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சகோதரரும் ஆன சினேகசிஷ் கங்குலி இதில் தலையிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகத்தை சமாதானம் செய்து இருந்தார். அதே சமயம், வர்ணனையின் போது ஹர்ஷா போக்ளே மற்றும் சைமன் டவுல் இந்த விவகாரம் பற்றிப் பேசுகையில், சுஜன் முகர்ஜியை நேரடியாக விமர்சித்திருந்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பணம் கட்டித்தான் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தை சொந்த மைதானமாகப் பயன்படுத்தி வருகிறது. எனவே, அவர்கள் கேட்பது போன்ற சூழ்நிலையை அந்த பிட்ச் பராமரிப்பாளர் ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஈடன் கார்டன் மைதானத்தை விட்டு வேறு மைதானத்திற்குச் செல்ல வேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் ஹர்ஷா போக்ளே மற்றும் சைமன் டவுல் செய்த விமர்சனத்தில் இடம் பெற்றிருந்தன. அது பெங்கால் கிரிக்கெட் சங்கத்தை கோபம் கொள்ளச் செய்து இருக்கிறது.
இதுகுறித்து பெங்கால் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐக்கு அளித்திருந்த விளக்கத்தில், ஐபிஎல் விதிமுறைகளின் படி தான் தாங்கள் பிட்சுகளைத் தயாரித்து வருவதாகவும், எந்த அணிக்கும் பிட்ச் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதற்கான உரிமை இல்லை என விதிமுறைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகவும் அந்த கடிதத்தில் தெளிவு படுத்தி உள்ளது.
அதைத்தொடர்ந்து, தற்போது ஹர்ஷா போக்ளே மற்றும் சைமன் டவுல் தங்களின் மைதான பிட்ச் பராமரிப்பாளரை விமர்சித்ததால் அவர்களை அனுமதிக்க முடியாது என பிசிசிஐக்குக் கடிதம் எழுதி இருக்கிறது பெங்கால் கிரிக்கெட் சங்கம். இதைத் தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டியின் போது ஹர்ஷா போக்ளே மற்றும் சைமன் டவுல் ஈடன் கார்டன் மைதானத்திற்குச் செல்ல மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
தற்காலிகமாக சர்ச்சையை தவிர்ப்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பிசிசிஐ பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் இந்த தடை முடிவை ஏற்குமா அல்லது மறுக்குமா என்பது இனிவரும் நாட்களில் தான் தெரிய வரும்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் ஈடன் கார்டன் மைதானத்திற்கு இடையே நடைபெற்ற மோதலைப் போல, பல்வேறு அணிகளுக்கும் தங்களின் சொந்த மைதான கிரிக்கெட் சங்கம் மற்றும் பிட்ச் பராமரிப்பாளருடன் மோதல் ஏற்பட்டு இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த ஆண்டில் தான் ஒவ்வொரு அணியும் தங்களின் சொந்த மைதானத்தில் தங்களுக்கு விருப்பமான பிட்ச் உருவாக்கப்படவில்லை என்ற புகாரை முன் வைத்துள்ளனர்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இதுபோன்ற புகாரை தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடிய முதல் போட்டிக்குப் பிறகு முன் வைத்திருந்தது. அதன் பின்னர் நிலைமை மாறியது. அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ஆந்திரப் பிரதேச கிரிக்கெட் சங்கத்திற்கும் இடையே முதலில் டிக்கெட் வழங்குவதில் மோதல் ஏற்பட்டது. ஆந்திர கிரிக்கெட் சங்கம் அதிக அளவிலான இலவச டிக்கெட் கேட்டதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் புகார் கூறியிருந்தது.
பின்னர் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக முடிவு எட்டப்பட்டது. அதன் பிறகு, ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆடும் போட்டிகளுக்கான பிட்சுகள் அந்த அணிக்கு சாதகம் இல்லாத வகையில் மாற்றி அமைக்கப்பட்டதாக ஒரு புகார் எழுந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விகளுக்கு, சென்னை சேப்பாக்கம் பிட்ச் எளிதாக கணிக்க முடியாத வகையில் இருப்பதுதான் காரணம் என அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த பிட்ச் சர்ச்சை பின்னணியில் பிசிசிஐ இருக்கிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில், சொல்லி வைத்தார் போல ஒவ்வொரு கிரிக்கெட் மைதானமும் பிட்சைத் தயாரிக்கும் போது அந்த ஐபிஎல் அணிக்கு சாதகம் இல்லாத வகையில் தயாரிப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை, ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் குறிப்பிட்ட அணிகளே தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால், அதைத் தடுப்பதற்காக இது போன்ற முயற்சிகளை பிசிசிஐ எடுத்துள்ளதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதுவரை ஐபிஎல் தொடர் 17 ஆண்டுகள் நடந்துள்ள நிலையில், அதில் மூன்று அணிகள் மட்டுமே 13 முறை கோப்பையை வென்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா ஐந்து முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்று முறையும் கோப்பை வென்றுள்ளன. இந்த ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பிசிசிஐ ஏதேனும் ரகசிய நடவடிக்கை எடுத்துள்ளதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஏனெனில், இந்த ஆண்டு புள்ளி பட்டியலைப் பார்த்தால், இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லாத அணிகள் தான் முதல் ஐந்து இடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. தற்போது முதல் இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி ஒருமுறை மட்டுமே ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது. அடுத்த நான்கு இடங்களில் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய நான்கு அணிகளும் இதுவரை கோப்பை வெல்லவில்லை.
அந்த அணிகளுக்கு இந்த ஆண்டு கோப்பை வெல்வதற்கான மிகச்சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அந்த நான்கு அணிகளும் இப்போதே 10 புள்ளிகளைப் பெற்று உள்ளன. இன்னும் மூன்று போட்டிகளில் வென்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட முடியும். இதன் மூலம் இந்த ஆண்டு புதியதாக ஒரு அணி ஐபிஎல் கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இப்படி ஒரு சூழ்நிலை உருவாக வேண்டி, ஏற்கனவே பலமுறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற அணிகளுக்கு சாதகம் இல்லாத பிட்சுகள் தயாரிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.