2 ரன் ஓடிய பின் பதறிய விராட் கோலி.. நெஞ்சில் கை வைத்து பரிசோதித்த சஞ்சு சாம்சன்.. ரசிகர்கள் கவலை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலி இரண்டு ரன்கள் ஓடியதற்குப் பிறகு தனது இதயம் சரியாக துடிக்கிறதா என பரிசோதனை செய்யுமாறு சஞ்சு சாம்சனை அழைத்தார். அவரும் பரிசோதனை செய்தார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது? ஏன் அவ்வாறு கோலி கேட்டார்? என பார்க்கலாம்.
2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது.

அப்போது அந்த அணியின் துவக்க வீரர்களான பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி அதிரடியாக ஆடினர். அவர்கள் முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தனர். பிலிப்ஸ் சால்ட் 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த பிறகு விராட் கோலி அதிரடியாக ரன் குவித்து வந்தார்.
15 வது ஓவரில் வனிந்து ஹசரங்கா வீசிய நான்காவது பந்தை அடித்து விட்டு அவர் இரண்டு ரன்கள் ஓடினார். அதற்குப் பிறகு. அவருக்கு தனது இதயத் துடிப்பில் சந்தேகம் இருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அருகே இருந்தார். அவரை அழைத்து தனது இதயத்துடிப்பு சரியாக இருக்கிறதா? என பார்க்குமாறு சொன்னார் கோலி.
சஞ்சு சாம்சன் தனது விக்கெட் கீப்பிங் கையுறையை அவிழ்த்துவிட்டு விராட் கோலியின் இதயத்தில் தனது உள்ளங்கையை வைத்து பரிசோதித்தார். அதன் பிறகு இதயத் துடிப்பு சரியாக இருக்கிறது என்றதும், விராட் கோலி தொடர்ந்து பேட்டிங் செய்தார். இந்த காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பானது.
இதை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்தனர். விராட் கோலிக்கு என்ன ஆனது? என அவர்கள் தங்கள் சந்தேகத்தை சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர். தற்போது வெயில் காலம் உச்சத்தில் இருக்கிறது. இந்த போட்டி மாலை நேரத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி பேட்டிங் செய்தபோது ஆறு மணிக்கு மேல் ஆகிவிட்டாலும் கூட வெப்பம் அதிகமாகவே இருந்தது. அந்த சூழ்நிலையில் அனைத்து வீரர்களுமே அடிக்கடி இடைவேளை எடுத்துக் கொண்டு அதிக நீர் மற்றும் பானங்களை அருந்தினர். இந்த சூழ்நிலையில் தான் விராட் கோலி தனது இதயம் சரியாக வேலை செய்கிறதா என பரிசோதிக்குமாறு சொல்லி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications