ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் வாஷிங்டன் சுந்தர் 49 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். அவர் அவுட் ஆனதில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது.
அவர் அவுட்டே இல்லை எனவும், மூன்றாவது நடுவர் தவறாக அவருக்கு அவுட் கொடுத்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 152 ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 16 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் நான்காம் வரிசையில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்ய வந்தார். அவர் வந்தவுடன் சிமர்ஜித் சிங் வீசிய ஆறாவது ஓவரில் 20 ரன்கள் சேர்த்து மிரட்டினார்.
அதன் பின்னரும் அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 29 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்திருந்த போது முகமது ஷமி வீசிய பந்தை அவர் அடித்தார். அந்த பந்தை அனிக்கேத் வர்மா கேட்ச் பிடிக்க முன்னே பாய்ந்து வந்தார். அவர் கேட்ச் பிடித்ததாக அவுட் கேட்டார். ஆனால் பந்து தரையோடு தரையாக சென்றதால் அது அவுட்டா இல்லையா என களத்தில் இருந்த அம்பயர்களுக்கு சந்தேகம் இருந்தது.
எனவே அவர்கள் மூன்றாவது அம்பயரின் உதவியை நாடினார்கள். மூன்றாவது அம்பயர் பலமுறை ரீப்ளே செய்து பார்த்தார். அதில் பார்க்கும் போது பந்து தரையில் உரசிய பின்னரே அனிக்கேத் வர்மா கேட்ச் பிடிப்பதாக தெரிந்தது. ஆனால், மூன்றாவது நடுவர் அது அவுட் என அறிவித்தார். இதன் மூலம் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.
அப்போது குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிக்கு அருகே இருந்ததால் இந்த முடிவு அந்த அணியை பாதிக்கவில்லை. ஆனால் வாஷிங்டன் சுந்தரின் ஆட்டம் 49 ரன்களுடன் முடிவுக்கு வந்தது. "மூன்றாவது அம்பயர் தூக்கத்தில் தவறான தீர்ப்பை சொல்லிவிட்டார்" என ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
பின்னர் இந்த போட்டியில் ரூதர்போர்டு அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். சுப்மன் கில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி 16.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்தியது.