சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாது என முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரரான ஏபி டி வில்லியர்ஸ் பேசியிருப்பது ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
2025 ஐபிஎல் தொடர் மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெற உள்ளது. முதல் போட்டியில் 2024 ஐபிஎல் தொடரின் சாம்பியன் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. அதைத் தொடர்ந்து 23ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்க ஜாம்பவானும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியவருமான ஏபி டி வில்லியர்ஸ் தனது ஐபிஎல் பிளே ஆஃப் கணிப்புகளை வெளியிட்டு இருந்தார்.
2025 ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது பற்றி அவர் பேசியிருந்தார். அப்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெயரை கூறவில்லை. மாறாக மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் எனக் கூறினார். இது பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
ஏபி டி வில்லியர்ஸ் பேசியதாவது, "மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயமாக இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் சிறப்பாக விளையாடி முன்னேறும். முந்தைய ஆண்டின் (2024) சாம்பியன் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என நான் நினைக்கிறேன். இந்த நான்கு அணிகள் தான் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும்" என்றார் ஏபி டி வில்லியர்ஸ்.
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை மூன்று முறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. 2020, 2022 மற்றும் 2024 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருந்தது.
இந்த மூன்றில், இரண்டு ஆண்டுகள் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டு பாதி தொடர் வரை ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்தார். அதில் அந்த அணி பல தோல்விகளை சந்தித்ததால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
அடுத்து 2024 ஆம் ஆண்டு தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகி ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டார். அப்போதும் அந்த அணி முன்னேறவில்லை. தற்போது மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாட உள்ளது.