அகமதாபாத்: இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருப்பவர் ஆயுஷ் மத்ரே. அதேபோல, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக கவனம் ஈர்த்த வீரர், 14 வயது பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷி.
தற்போது இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆயுஷ் மத்ரே மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகிய இருவரும் தங்களின் போட்டிகளை விளையாடி முடித்துள்ளனர். இந்த நிலையில், அவர்கள் இருவரது செயல்பாட்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு விளையாடி உள்ளனர்.

14 வயதான வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து 7 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதில் அவர் 252 ரன்கள் சேர்த்து இருக்கிறார். ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்திருக்கிறார். ஒருமுறை ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகியிருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 36 என்பதாகவும், ஸ்ட்ரைக் ரேட் 206.5 என்பதாகவும் உள்ளது. ஏழு போட்டிகளில் நான்கு முறை 30க்கும் அதிகமான ஸ்கோர்களை எடுத்துள்ளார்.
மறுபுறம், 17 வயதான ஆயுஷ் மத்ரே 7 போட்டிகளில் விளையாடி 240 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 34.28 என்பதாக உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 188.9 என்பதாக உள்ளது. அவர் ஒரு அரை சதம் அடித்திருக்கிறார். அதிலும் ஆறு ரன்களில் தனது சதத்தை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது. இவரும் வைபவ் சூர்யவன்ஷியைப் போலவே ஒரு போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகியிருக்கிறார். ஏழு போட்டிகளில் ஐந்து முறை 30க்கும் அதிகமான ஸ்கோர்களை எடுத்துள்ளார்.
இந்த இரண்டு புள்ளிவிவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஆயுஷ் மத்ரே ஒருவருக்கொருவர் போட்டி போட்டு விளையாடியிருப்பதை புரிந்துகொள்ளலாம். வைபவ் சூர்யவன்ஷி அதிக சிக்ஸர்களை (24 சிக்ஸர்கள்) அடித்திருக்கிறார். ஆயுஷ் மத்ரே அதிக பவுண்டரிகளை (31 பவுண்டரிகள்) அடித்திருக்கிறார்.
வைபவ் 18 பவுண்டரிகள் மற்றும் 24 சிக்ஸர்களை அடித்திருக்கிறார். மறுபுறம், ஆயுஷ் மத்ரே 31 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களை அடித்திருக்கிறார். இருவரின் விளையாட்டு பாணியும் வெவ்வேறாக இருந்தாலும், இருவரின் ரன்கள் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளது.
இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப் பட்டியலில் ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களை பிடித்து தொடரிலிருந்து வெளியேறி இருந்தாலும், இந்த இரண்டு இளம் வீரர்களும் அந்த அணிகளுக்குக் கிடைத்த நம்பிக்கையாக அமைந்திருக்கிறார்கள். மேலும், இந்திய அணிக்கும் வருங்கால நட்சத்திர வீரர்களாக இவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.