For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025: கடைசி வரை போராடிய ருதுராஜ்.. அணியை விட்டே நீக்கிய சிஎஸ்கே நிர்வாகம்.. ஓகே சொன்ன தோனி

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டிருக்கிறார். 2025 ஐபிஎல் தொடரில் இருந்தும் அவர் நீக்கப்பட்டு இருக்கிறார். இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் வட்டாரத்தில் இருந்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்படி ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டார், தோனி எவ்வாறு கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது பற்றி சில விளக்கங்கள் கிடைத்துள்ளன.

ருதுராஜ் கெய்க்வாட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியபோது காயம் அடைந்தார். அந்தப் போட்டியில் துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்து அவரது முழங்கையில் பட்டது. அந்தப் போட்டியில் அவர் அதன் பின்னரும் பேட்டிங் செய்து 63 ரன்கள் சேர்த்திருந்தார்.

IPL 2025 CSK Captaincy change explained Why Ruturaj Gaikwad dropped How did MS Dhoni became Captain

ஆனால், அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாகவே அவரது காயம் குணமாகவில்லை என்ற தகவல் வெளியானது. அவர் அப்போதே அணியில் இருந்து ஒன்று அல்லது இரண்டு போட்டிகளுக்கு விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அணியின் நலன் கருதி ருதுராஜ் கெய்க்வாட் வலியுடன் விளையாடினார் என கூறப்படுகிறது. ஆனால், அது அணியையும் பாதித்தது. அவர் வலியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராகவும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் விளையாடினார். ஆனால் அந்த இரண்டு போட்டிகளிலும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 5 ரன்களும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஒரு ரன்னும் மட்டுமே எடுத்து இருந்தார். தனது காயத்தால் சிஎஸ்கே அணிக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை உணர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் வேறு வழியின்றி விலகும் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் கேப்டன் ருதுராஜ் மருத்துவ குழுவுடன் ஆலோசனை செய்து அதன் பின்னர் விலகும் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த முடிவு டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டிக்கு முன்னதாகவே ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே இது அவசர கதியில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

இரண்டு போட்டிகள் வரை ருதுராஜ் கெய்க்வாட்டை ஆட வைத்து பார்த்து அது அணியை பாதிக்கிறது என்று தெரிந்தவுடன் தான் அவரை அணியில் இருந்து நீக்கும் முடிவை சிஎஸ்கே நிர்வாகம் எடுத்து இருக்கிறது. மேலும், அவரது காயம் அத்தனை எளிதில் குணமாகாது என்பதையும் மருத்துவ குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அதனால் வேறு வழியின்றி ருதுராஜ் கெய்க்வாட்டை நீக்க முடிவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுத்து இருக்கிறது.

அதே சமயம் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக தற்காலிக கேப்டனாக வேறு யாரையும் நியமித்தாலும் அது மேலும் அணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் மூத்த வீரரும், முன்னாள் கேப்டனுமான தோனியை மீண்டும் கேப்டனாக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. தோனியும் அந்த முடிவுக்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

தோனியின் பேட்டிங் குறித்து விமர்சனங்கள் இருக்கும் நிலையில் அவர் தற்போது கேப்டன் பொறுப்பையும் ஏற்க இருக்கிறார். ஆனால், தோனி கேப்டன் ஆனால் சிஎஸ்கே அணி உற்சாகமடைந்து வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

அவர் கேப்டனாக முன்வந்து நின்றாலே வீரர்கள் அனைவருக்கும் உற்சாகம் வந்துவிடும் என எதிர்பார்க்கலாம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெறுமா, தோனியின் கேப்டன்சி அந்த அணிக்கு மாற்றத்தை அளிக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதற்கிடையே ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே வீரர்களுடன் கால்பந்து விளையாடும் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பி இருந்தது. கெய்க்வாட்டிற்கு உண்மையாகவே காயம் ஏற்பட்டிருக்கிறதா அல்லது தோனியை கேப்டன் ஆக்க வேண்டிய சிஎஸ்கே நிர்வாகம் அவரை வெளியேற்றியதா, அந்தக் காயம் பொய்யானதா என பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எழுப்பி வந்தனர்.

ஆனால் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் முழங்கை எலும்பு முறிவு பெரிதாக இல்லாமல் இருக்கலாம். அவருக்கு பேட்டிங் செய்யும்போது அது அசௌகரியத்தை அளிக்கக்கூடும். அதனால் தான் கடந்த இரண்டு போட்டிகளில் அவர் ரன் குவிக்காமல் இருந்திருக்கிறார். அதை ஒட்டியே அவர் விலகும் முடிவையும் எடுத்து இருக்கிறார்.

ருதுராஜ் கெய்க்வாட் அந்த காயத்துடன் தொடர்ந்து விளையாடும் பட்சத்தில் அது மேலும் பெரிதாக மாறக்கூடும். அது ஒரு புறம் இருக்க அவரால் முழு திறனை வெளிப்படுத்தி பேட்டிங் செய்ய முடியாது என்பதும் அணியை பாதிக்கும். எனவேதான் அவர் விலக முடிவு எடுத்து இருக்கிறார்.

விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் முழங்கை எலும்பு முறிவு குணமாக குறைந்தபட்சம் மூன்று வாரங்களில் இருந்து அதிகபட்சம் ஆறு வாரங்கள் வரை ஆகும். ஆனால், இது காயம் குணமாகும் காலம் மட்டுமே. அதற்குப் பிறகு அந்த வீரர் கைகளை அசைத்து மீண்டும் பழைய நிலைக்கு முழங்கையை கொண்டு வருவதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர் முழு உடல் தகுதியை பெறுவார். அதற்கு சில மாதங்கள் வரை கூட ஆகலாம் என கூறப்படுகிறது.

அதன்படி பார்த்தால் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு சிறிய அளவிலான முழங்கை எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அவர் முழு அளவில் குணமாகி வருவதற்கு குறைந்தது ஆறு வாரங்களுக்கு மேல் ஆகும். அப்போது எப்படியும் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று வந்திருக்கும். அதற்குள் அவர் முழு அளவில் குணமடைந்து விடுவாரா என்பதும் சந்தேகத்திற்குரியதாக இருக்கும். இந்த நிச்சயமற்ற சூழ்நிலையால் தான் அவர் விலகும் முடிவை எடுத்து இருக்கிறார்.

மேலும், அவர் கேப்டனாக இருப்பதால் இந்த சிக்கல் மேலும் அழுத்தத்தை அளித்து இருக்கிறது. ருதுராஜால் 100 சதவீத திறனுடன் விளையாட முடியவில்லை என்றால் நிச்சயமாக அது அணியின் திட்டங்களை பாதிக்கும். ஏற்கனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விளையாடிய முதல் 5 போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்து இருக்கிறது, ஒரு வெற்றியை மட்டுமே பெற்று இருக்கிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் கேப்டனும் முழு உடல் தகுதியுடன் இல்லை என்றால் அது நிச்சயம் வீரர்களிடையே சோர்வை ஏற்படுத்தும். அணியின் வீழ்ச்சிக்காகவும் நலனுக்காகவும் அவர் விலகி இருக்கிறார். தோனி 43 வயதில் அந்த அணியின் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்போது இருக்கும் நிலைமைக்கு இது தோனி கேப்டனாக விளையாடுவது தான் சரியான முடிவாக இருக்கும். அவர் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதை தாண்டி ஒரு சிறந்த கேப்டனாகவே இதுவரை செயல்பட்டு இருக்கிறார். அந்த வகையில் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்படுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரும் உத்வேதத்தை அளிக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

Story first published: Friday, April 11, 2025, 8:25 [IST]
Other articles published on Apr 11, 2025
English summary
IPL 2025 CSK Captaincy change explained: Why Ruturaj Gaikwad dropped? How did MS Dhoni became Captain?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+