சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் நான்கு தோல்விகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இனிவரும் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழ்நிலை உள்ளது.
இந்த நிலையில், சிஎஸ்கே அணி எப்படி மீண்டு வரலாம் என்பது பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில யோசனைகளை கூறியிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலவீனமே பந்துவீச்சு தான் என அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும், பேட்டிங்கில் சிஎஸ்கே அணியால் 180 ரன்களுக்கு மேல் எடுக்க முடியாது என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்போது பந்துவீச்சில் மிகப்பெரிய மாற்றத்தை செய்ய வேண்டும். எதிரணியை 180க்கும் குறைவான ரன்களில் ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். ஏனெனில், அவர்கள் பேட்டிங் ஆர்டர் அதற்கு மேல் ரன் குவிக்க முடியாது என்பது போல உள்ளது."
"சிஎஸ்கே இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால், அந்த அணியின் பந்துவீச்சில் தான் அது இருக்கிறது, பேட்டிங்கில் இல்லை" என்று கூறியிருக்கிறார். மேலும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை விவரித்தார்.
"இந்த போட்டியில் 83 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் இருந்த நிலையில் பஞ்சாப் இருந்தது. அங்கிருந்து நீங்கள் 130 ரன்கள் எடுக்க விட்டீர்கள் என்றால், தொடர்ந்து கேட்சுகளை நழுவ விட்டீர்கள் என்றால், நிச்சயமாக நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள். நீங்கள் எந்த அளவுக்கு சிறப்பாக சேஸிங் செய்தாலும் உங்களால் வெற்றி பெற முடியாது" என்று கூறியிருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து ஏப்ரல் 11 அன்று தனது அடுத்த போட்டியில் விளையாட உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடனான அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறவில்லை என்றால் பிளே ஆஃப் செல்வது சிக்கலாக மாறக் கூடும்.