சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் முன்னாள் வீரரும், பவுலிங் ஆலோசகரும் ஆன டிவைன் பிராவோ அந்த அணியை விட்டு விலகி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இணைந்து இருக்கிறார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பலரும் சிஎஸ்கே நிர்வாகம் பிராவோவை கைவிட்டு இருக்கக் கூடாது என விமர்சனம் செய்து வருகின்றனர்.
வேறு சிலரோ பிராவோ சிஎஸ்கே அணியின் முதுகில் குத்தி விட்டார் எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர். உண்மையில் என்ன நடந்தது? ஏன் பிராவோ நைட் ரைடர்ஸ் அணிக்கு சென்றார்? என்பது குறித்து பார்க்கலாம்.

டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக இருக்கிறார் டிவைன் பிராவோ. அவர் இதுவரை 582 டி20 போட்டிகளில் விளையாடி 631 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். மேலும் 7,000 ரன்களையும் எடுத்து இருக்கிறார். டி20 கிரிக்கெட்டின் சிறந்த ஆல் ரவுண்டராக அறியப்பட்டவர். மேலும், பல்வேறு டி20 தொடர்களில் விளையாடி பலமுறை தான் ஆடிய அணிக்கு கோப்பை வென்று கொடுத்து இருக்கிறார்.
சிஎஸ்கே அணிக்கு ஒரு வீரராக இரண்டு முறை கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்து இருக்கிறார். மேலும், பவுலிங் ஆலோசகராக 2023 இல் சிஎஸ்கே அணிக்கு கோப்பை வென்று கொடுத்து இருக்கிறார். சிஎஸ்கே அணியின் பவுலிங் ஆலோசகராக நியமிக்கப்பட்ட பின்னரும் அவர் உலகின் பல்வேறு டி20 தொடர்களில் ஒரு வீரராக விளையாடி வந்தார். தற்போது 40 வயதை எட்டி இருக்கும் அவர் இன்னும் சில மாதங்களில் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்து இருந்தார்.
ஆனால், அவருக்கு தற்போது காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால், 2024 கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் இருந்து கடைசி கட்ட போட்டிகளின் போது விலகி இருக்கிறார். அதை தொடர்ந்து ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பதாக அந்த அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனை அடுத்து சிஎஸ்கே அணி எப்படி அவரை விடுவித்தது? என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் ஆலோசகராக சிறப்பாக செயல்பட்டு இருந்தார் பிராவோ. மதிஷா பதிரானா மற்றும் துஷார் தேஷ்பாண்டேவை அவர் பட்டை தீட்டி சிறப்பாக செயல்பட வைத்தார். அவர்கள் இருவரும் சிஎஸ்கே அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களாக மாறினர்.
இந்த நிலையில், அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தாவி இருப்பது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக மாறி உள்ளது. எனினும், ஒரு அணியின் ஆலோசகர் பதவி என்பது அதிக மதிப்புமிக்கது என்பதோடு அதிக வருமானத்தையும் பிராவோவுக்கு பெற்றுத் தரும். அந்த வகையில் சிஎஸ்கே அணியால் பவுலிங் ஆலோசகர் என்ற பதவியை மட்டுமே அளித்து அவரை தக்க வைப்பது முடியாத காரியமாக மாறி இருக்கிறது.
மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவருக்கு ஒரே நேரத்தில் நான்கு அணிகளின் ஆலோசகர் பதவியை அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் மட்டுமின்றி பல்வேறு டி20 தொடர்களில் அணிகளை சொந்தமாக வைத்துள்ளது. கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் இடம் பெற்றுள்ள ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் பதவியும், அமெரிக்காவின் டி20 தொடரான எம்எல்சி இல் இடம் பெற்றுள்ள லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் பதவியும், ஐக்கிய அரபு அமீரகத்தின் டி20 தொடரான இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் இடம் பெற்றுள்ள அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் பதவியும் பிராவோவுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த நான்கு அணிகளின் ஆலோசகர் பதவியின் மூலம் அவர் பல கோடிகளை வருமானமாக ஈட்டுவார். அதனால், பிராவோ சிஎஸ்கே அணியை விட்டு சென்றது என்பது தொழில்முறையில் ஒரு சரியான நகர்வாகவே பார்க்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்குப் பின் அவருக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்பவும் வாய்ப்பு உள்ளது.