சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ அணியுடன் இன்று பல பரிட்சை நடத்துகிறது.30-வது லீக் ஆட்டமான இந்தப் போட்டி லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் தோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நாங்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கு சென்றாலும் ரசிகர்கள் அதிக அளவு எங்களை ஆதரிக்கிறார்கள். இது உண்மையிலே ஆசீர்வதிக்கப்பட்டதாக நான் நினைக்கின்றேன்.

என்னுடைய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் முதலில் பந்து வீச முடிவு எடுத்து இருக்கின்றோம். லக்னோவில் இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கிறது. இதனால் இரண்டாவது இன்னிங்சில் ஆடுகளம் கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறும் என நினைக்கின்றேன்.
டி 20 போட்டிகளுக்கு தேவையான உத்வேகத்துடன் வீரர்கள் இருக்க வேண்டும். எங்கள் அணி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. நாங்கள் சரியாக விளையாடவில்லை. பந்துவீச்சில் நாங்கள் நன்றாக செயல்பட்டு இருக்கிறோம். இவ்வளவு தோல்விகளை தழுதினாலும் நல்ல மன உத்வேகத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
தேவைப்படும் நேரத்தில் பெரிய ஷாட்களை ஆடுங்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் இரண்டு மாற்றங்களை செய்திருக்கின்றோம். அஸ்வினுக்கு பதிலாக ஜெமி ஓவர்டனும் கான்வேக்கு பதிலாக ஷேக் ரசீதும் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள் என்று தோனி கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், நாங்களும் முதலில் பந்து வீச தான் முடிவெடுத்திருந்தோம். இதற்கு காரணம் ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் ஆடுகளம் மெதுவாக இருக்கும். ஆட்டம் செல்ல செல்ல பேட்டிங்கிற்கு சாதகமாக மாறுகிறது. சிஎஸ்கேவுக்கு கொஞ்சம் கூட இடம் கொடுத்தாலும், அவர்கள் நல்ல ஒரு ஆட்டத்தை ஆடி வெற்றி பெற்று விடுவார்கள். எனவே நூறு சதவீதம் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும். நாங்கள் இங்கு நல்ல கிரிக்கெட் ஆடுவதற்காக தான் வந்திருக்கிறோம். எங்கள் அணியில் இன்று மார்ஸ் பிளேயிங் லெவனுக்குள் திரும்பி இருக்கிறார் என்று பண்ட் கூறியுள்ளார்.