மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்து இருக்கிறது. அதாவது ஒரு அணி ஏலத்துக்கு முன்பே ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் அல்லது ஏலத்தின் போது ஆறு வீரர்கள் வரை "ரைட் டூ மேட்ச்" என்ற விதியை பயன்படுத்தி எந்த அணி தங்கள் அணியின் முன்னாள் வீரரை வாங்கினாலும் அதே விலைக்கு தங்கள் அணிக்கே அந்த வீரரை அழைத்துக் கொள்ளலாம்.
மொத்தத்தில் தக்க வைக்கும் வீரர்கள் மற்றும் ரைட் டூ மேட்ச் படி அழைத்துக் கொள்ளும் வீரர்களின் அதிகபட்ச எண்ணிக்கை ஆறு மட்டுமே. ஒவ்வொரு அணியும் தங்கள் விருப்பப்படி எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்? எத்தனை வீரர்களை ரைட் டூ மேட்ச் என்ற விதியை பயன்படுத்தி ஏலத்தின் போது அழைத்துக் கொள்ளலாம்? என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

இந்த ஆறு வீரர்களில் அதிகபட்சமாக ஐந்து சர்வதேச போட்டிகளில் ஆடும் வீரர்கள் இடம் பெறலாம். அதிகபட்சமாக இரண்டு உள்ளூர் வீரர்கள் இடம் பெறலாம். ஐபிஎல் வரலாற்றிலேயே இது வரை ஆறு வீரர்களை தக்க வைக்க அனுமதிக்கப்பட்டதில்லை. இதுவே அதிகபட்சமான எண்ணிக்கை ஆகும். இதற்கு முன் நான்கு வீரர்கள் வரை தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஐபிஎல் அணிகளின் விருப்பப்படி ஆறு வீரர்கள் வரை தக்க வைக்க பிசிசிஐ அனுமதி அளித்து இருக்கிறது.
இந்த விதி மாற்றம் மூன்று ஐபிஎல் அணிகளுக்கு மிகப் பெரிய அளவில் சாதகமாக இருக்கும் என சுட்டிக் காட்டப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய மூன்று அணிகளும் இந்த விதியால் மிகப்பெரிய அளவில் பலன் அடைவார்கள். இந்த மூன்று அணிகளுமே அதிக அளவிலான ஐபிஎல் கோப்பைகளை வென்று இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று அணிகளும் தங்களின் முக்கிய வீரர்களை ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திற்கு முன்பும் தக்க வைப்பதே அதற்கு காரணம். அப்படியே தக்க வைக்க முடியாமல் போனாலும் ஏலத்தில் தங்கள் அணியின் வீரர்களை போட்டி போட்டு வாங்கி விடுவார்கள். அதன் காரணமாகவே, இந்த மூன்று அணிகளும் வெற்றிகரமான அணிகளாக உள்ளன. தற்போது இந்த மூன்று முக்கிய அணிகளும் ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற விதியால் அதிக பயனை அடைவார்கள்.
பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் போன்ற அணிகளுக்கு இந்த விதியால் பெரிய அளவில் பயன் இருக்காது. அந்த அணிகள் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று வீரர்களை மட்டுமே முக்கிய வீரர்களாக பார்த்து வருகின்றன.
ஆறு வீரர்களை தக்க வைக்கலாம் என அறிவித்து இருந்தாலும் ஒரு வீரரை தக்க வைக்க அதிக தொகையை ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது தற்போது ஒரு அணி ஆறு வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்றால் மொத்தமாக 79 கோடி ரூபாயை செலவிட வேண்டி இருக்கும். ஐபிஎல் ஏலத்துக்கான மொத்த செலவு தொகை 120 கோடி மட்டுமே. அதன்படி பார்த்தால் ஒரு அணி 79 கோடியை வீரர்களை தக்க வைக்க செலவிட்டால் மீதம் 41 கோடி மட்டுமே கையிருப்பில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.