மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் இருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் உள்ள குர்பஜனீத் சிங் காயம் காரணமாக தொடரை விட்டு வெளியேறிய நிலையில், அவருக்கு பதில் பிரவீஸ் என்ற தென்னாப்பிரிக்கா வீரரை சிஎஸ்கே அணி தேர்வு செய்திருக்கிறது.
குட்டி டிவில்லியர்ஸ் என்று அழைக்கப்பட்ட 21 வயது இதுதான் பிரவீஸ் கடந்த ஏலத்தில் எந்த அணியாலும் கண்டுகொள்ளப்படவில்லை. தென்னாப்பிரிக்கா உள்ளூர் அணியான டைட்டன்ஸ் பயிற்சியாளர் ரிச்சர்ட்ஸ் பிரவீசை பாராட்டி அளித்துள்ள பேட்டியை தற்போது பார்க்கலாம்.

2024 ஆம் ஆண்டு பிரவீஸ்க்கு ஒரு சராசரியான ஒரு ஆண்டாகவே அமைந்தது.ஆனால் அதன் பிறகு கடுமையாக உழைத்து பேட்டிங்கில் அவர் நன்றாக விளையாடி வந்தார். எனினும் ஐபிஎல் தொடர் ஏலம் நவம்பர் மாதமே நடந்ததால் பிரவீசை எந்த ஒரு அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
ஆனால் தன் வாழ்நாளில் சிறந்த பார்மை கடந்த நான்கு ஐந்து மாதமாக தான் அவர் எட்டி இருக்கிறார். பிரவீஸ் மூன்று நான்கு ஆண்டுகள் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் கூட இரண்டு சீசன் ஆடி இருக்கிறார். எனினும் அவர் இளம் வீரர் என்பதை அனைவரும் மறந்து விடுகின்றோம்.
எனவே அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையின் ஏற்ற இறக்கம் கண்டிப்பாக இருக்கும். சில சமயம் அவர் சரியாக ரன் சேர்க்காமல் போகலாம். ஆனால் அவர் கடுமையாக உழைத்து வருகிறார். ஐபிஎல் தொடரில் யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை என்றாலும், தம்மால் ஐபிஎல் போட்டிகளில் கம்பேக் கொடுக்க முடியும் என்று நம்பிக்கையில் இருந்தார்.
அவர் தனக்கு உண்மையாக இருந்ததால், அவருடைய நேர்மறையான எண்ணங்கள் தான் தற்போது அவருக்கு ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த மூன்று நான்கு மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு போட்டியில் பிரவீஸ் விளையாடிக் கொண்டு இருந்தார். அதற்கான நல்ல பலன் தற்போது கிடைத்திருக்கின்றது.
தற்போது சிஎஸ்கே அணி அவரை தேர்வு செய்திருக்கிறது. அவர் கடந்த நான்கு மாதம் போட்ட உழைப்புக்கு கிடைத்த பரிசாக நான் இதை கருதுகிறேன். பிரவீஸ் ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய வீரர். குறிப்பாக சுழற் பந்துவீச்சாளருக்கு எதிராக அதிரடி காட்டுவார். போட்டியின் சூழல் எவ்வாறு இருக்கிறது என்பதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அதிரடி காட்டுவது அவருடைய பலமாக நான் கருதுகிறேன் என்று டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.