சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 2025 ஐபிஎல் ஏலத்தில் பெரும் தொகைக்கு வாங்கப்பட்ட ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அஹமது தென்னாப்பிரிக்கா டி20 தொடரான எஸ்ஏ டி20 தொடரில் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் அபாரமாக பந்து வீசி இருக்கிறார்.
அவரது ஆட்டத்தை பார்த்து சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அவர் சேப்பாக்கத்தில் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து பந்து வீசினால் எதிரணிகள் காலியாகி விடும் என சமூக வலைதளங்களில் சிலாகித்து கூறி உள்ளனர்.

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நூர் அஹமதை மிக அதிக விலை கொடுத்து வாங்கியது. 10 கோடி ரூபாய்க்கு நூர் அஹமதை சிஎஸ்கே அணி வாங்கி இருந்தது. எதற்காக ஆப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சாளருக்கு இத்தனை பெரிய தொகை கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கி இருக்கிறது? என்ற விமர்சனம் எழுந்தது.
ஏனெனில், ஏற்கனவே சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா இருக்கிறார். மேலும், ரவிச்சந்திரன் அஸ்வினையும் 9.75 கோடி கொடுத்து சிஎஸ்கே அணி வாங்கி இருந்தது. இரண்டு அனுபவ ஸ்பின்னர்கள் இருக்கும்போது கூடுதலாக ஒரு உள்ளூர் ஸ்பின்னரை வாங்கி இருக்கலாம் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.
ஆனால், நூர் அஹமது சிறப்பாக செயல்படக்கூடிய ஸ்பின்னர் என்பது தற்போது நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 தொடரின் மூலம் உறுதியாகி இருக்கிறது. அவர் இந்த தொடரில் இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் கட்டுக்கோப்பாக பந்து வீசி இருக்கிறார்.
2025 எஸ்ஏ டி20 தொடரில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பெற்று ஆடி வரும் நூர் அஹமது தனது முதல் போட்டியில் 4 ஓவர்களில் 34 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். அடுத்த போட்டியில் 4 ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார். விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. ஆனால், மிகக் குறைந்த அளவில் ரன்களை விட்டுக்கொடுத்து இருந்தார்.
அடுத்து மூன்றாவது போட்டியில் 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதை அடுத்து சிஎஸ்கே ரசிகர்களின் கவனம் அவர் மீது விழுந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் என்பதால் நூர் அஹமது சிஎஸ்கே ஆடும் போட்டிகள் பலவற்றிலும் இடம் பெறும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் மற்றும் நூர் அஹமது என மூன்று ஸ்பின்னர்களை ஆட வைத்தால், அது நிச்சயம் எதிரணிக்கு கடினமான சூழ்நிலையை உருவாக்கும். மூவரும் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட் வீழ்த்தும் திறன் உடையவர்கள்.
இதில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இந்திய வீரர்கள் என்பதால் கூடுதலாக ஒரு வெளிநாட்டு வீரராக நூர் அஹமதை ஆட வைப்பதில் சிக்கல் இருக்காது. அதற்காகத்தான் சிஎஸ்கே அணி திட்டமிட்டு ஜடேஜா மற்றும் அஸ்வின் இருப்பதை முன் வைத்து உள்ளூர் வீரர்களை வாங்காமல் வெளிநாட்டு சுழற் பந்துவீச்சாளரை வாங்கி உள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தான் வீரரை வாங்கியதன் மூலம் அவர் பாதி தொடரில் வெளியேறுவதற்கான வாய்ப்பும் மிகவும் குறைவாகவே இருக்கும். இதற்கு முன் சிஎஸ்கே அணியில் சில வெளிநாட்டு வீரர்களால் கசப்பான சம்பவங்களும் நடந்து உள்ளன. குறிப்பாக இங்கிலாந்து மற்றும் வங்கதேச வீரர்கள் பாதி தொடரில் வெளியேறி இருக்கின்றனர்.
கடந்த ஆண்டு இலங்கை அணியின் வேகப்பந்து பேச்சாளர் மதிஷா பதிரானா பாதியில் வெளியேறினார். அது சிஎஸ்கே அணியின் வெற்றி வாய்ப்பையும் பறித்தது. இதுபோல சில அணிகள் வெளிநாட்டு வீரர்களை ஆட வைப்பதில் சிக்கல் இருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தான் வீரரை ஆட வைத்தால் அந்த சிக்கல் இருக்காது. ஆப்கானிஸ்தான அணி எப்போதும் தங்கள் அணி வீரர்களை பாதி தொடரில் இருந்து அழைத்துக்கொள்ளாது. எனவே சிஎஸ்கே அணி கச்சிதமாக திட்டமிட்டு நூர் அஹமதை வாங்கியதை சிஎஸ்கே ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.