மெகா தவறு செய்த சிஎஸ்கே.. தோல்விக்கு காரணமே இந்த 8 பந்துகள் தான்.. நொந்து போன தோனி.. என்ன நடந்தது?
சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி நேரத்தில் செய்த தவறுகளால் தோல்வியைச் சந்தித்தது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் ரன் சேர்த்து, ஒரு நல்ல ஸ்கோரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக, ஒரு முக்கிய வீரர் சாம் கரன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். இதனால், சிஎஸ்கே அணி 200 ரன்களைத் தாண்டி ரன் குவிக்கும் என்ற நிலை ஏற்பட்டது. அணியில் அடுத்து வரவிருந்த பேட்ஸ்மேன்களும் அதிரடியாக ஆடக்கூடியவர்கள் என்பதால், 200 ரன்களை தாண்டி மிகப்பெரிய ஸ்கோர் நிச்சயம் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், போட்டியின் இறுதிக்கட்ட ஓவர்களில் ஆட்டம் முற்றிலுமாக மாறியது. 18-வது ஓவரில் சாம் கரன் ஆட்டமிழந்த பிறகு, களமிறங்கிய வீரர்கள் நிலைத்து நின்று ஆடத் தவறினர். குறிப்பாக 19-வது ஓவரில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி பெரும் சரிவைச் சந்தித்தது.
தோனி 4 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த நிலையிலும், அவரைத் தொடர்ந்து தீபக் ஹூடா, அன்சுல் கம்போஜ், நூர் அஹமது ஆகியோர் 19வது ஓவரில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். களத்தில் சிவம் துபே இருந்ததால் கடைசி ஓவரில் ரன் குவிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் விரைவிலேயே ஆட்டமிழந்தார்.
இதனால் சிஎஸ்கே அணியால் கடைசி ஓவர்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இந்த மோசமான விக்கெட் சரிவால், சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவதற்கு முன்னரே, வெறும் 19.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கடைசி ஓவரில் நான்கு பந்துகளை சிஎஸ்கே அணியால் ஆட முடியாமல் போனது. 19 வது ஓவரில் நான்கு விக்கெட்களால் நான்கு பந்துகள் வீணானது. கடைசி 12 பந்துகளில் சிஎஸ்கே அணி கிட்டத்தட்ட 8 பந்துகளை வீணடித்ததாகக் கருதலாம். கடைசி ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்காமல் சில பவுண்டரிகளை அடித்திருந்தால், சிஎஸ்கே அணி நிச்சயமாக 210 ரன்களுக்கு மேல் எடுத்திருக்க முடியும்.
சிஎஸ்கே அணி எடுத்த 190 ரன்கள் என்ற இலக்கை, எதிரணியான பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களிலேயே எட்டி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணி 210 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தால், பஞ்சாப் அணி ரன்ரேட் அழுத்தத்துக்கு உள்ளாகி நிச்சயமாக தோல்வியடைந்திருக்க அதிக வாய்ப்பு இருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் நடந்த இந்த திடீர் விக்கெட் சரிவு மற்றும் ரன் சேர்க்கத் தவறியதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வியடைய முக்கிய காரணமாக அமைந்தது. இந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் எட்டு தோல்விகளைச் சந்தித்து, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்து பரிதாப நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் கிங்ஸ் இந்த வெற்றியால் தற்போது புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.


Click it and Unblock the Notifications